நாசாவில் விண்வெளி ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்த ராமநாதபுரம் அரசு பள்ளி மாணவர்


நாசாவில் விண்வெளி ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்த ராமநாதபுரம் அரசு பள்ளி மாணவர்
x

அமெரிக்காவில் உள்ள நாசா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படிக்க ராமநாதபுரத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர் சென்று உள்ளார்.

ராமநாதபுரம்

அமெரிக்காவில் உள்ள நாசா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படிக்க ராமநாதபுரத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர் சென்று உள்ளார்.

அரசு பள்ளி மாணவர்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கிராமம் நரசிங்ககூட்டம். இங்குள்ள மண்குடிசை வீட்டில் முனியசாமி, பூபதி தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் சிவபெருமான். ஏழ்மை குடும்பத்தில் பிறந்த சிவபெருமான் தினமும் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பள்ளியில் படித்தார். வீட்டில் மின்இணைப்பு இல்லை. தனது வறுமையை உணர்ந்து தெருவில் நிலவொளியில் படிக்கும்போதே அப்போது வானில் கண்டு ரசித்த நிலவும், நட்சத்திரங்களும் அவரின் மனதில் விண்வெளி ஆராய்ச்சி விதையை ஊன்றியது.

விடா முயற்சியால் 10-ம் வகுப்பு தேர்வில் 433 மதிப்பெண் பெற்று மேல்நிலைப்படிப்பில் கணிதம் பாடத்தினை தேர்வு செய்தார். இவருக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு எலைட் பள்ளியில் சேர வாய்ப்பு கிடைத்தது. இவர் பிளஸ்-2 தேர்வில் 1200-க்கு 1086 மதிப்பெண்கள் பெற்றார். இயற்பியலில் 200, கணிதத்தில் 199, வேதியியலில் 198, உயிரியலில் 192 என மதிப்பெண் பெற்றதால் குரோம்பேட்டை அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி.யில் பி.டெக். ஏரோநாட்டிக்கல் பயில வாய்ப்பு கிடைத்தது..

நாசாவில் படிக்க வாய்ப்பு

அங்கு படிப்பை முடித்த நிலையில் கான்பூர் ஐ.ஐ.டி.யில் ஏரோஸ்பேஸ் பொறியியல் கல்வியை உதவித்தொகையுடன் பயின்றார். அங்கு பேராசிரியர் மங்கல் கோத்தாரியின் ஊக்கத்தினால் விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டு நாசாவின் ஆதரவுடன் இயங்கும் அமெரிக்கா அரிசோனா பல்கலைக்கழகத்தில் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் பி.எச்.டி. பயில வாய்ப்பு கிடைத்தது.

சிவபெருமான் தற்போது நேரடி ஆராய்ச்சி வகுப்புகளில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நாசாவின் ஆதரவு பல்கலைக்கழகத்தில் சிறுகோள்களை சுற்றி செயற்கைகோள்களை எப்படி சிறப்பாக இயங்க செய்ய முடியும் என்று தனது ஆய்வினை அவர் மேற்கொள்வதோடு கிரகங்கள் தொடர்பான ஆய்வினை தொடர உள்ளார்.

மாவட்டத்துக்கு பெருமை

அரசு பள்ளியில் தமிழ்வழியில் படித்து இன்று அமெரிக்காவில் நாசாவின் பல்கலைக்கழகத்திற்கு ஆராய்ச்சி கல்வி பயில சென்றுள்ள சிவபெருமானால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை கிடைத்துள்ளது என்றால் அது மிகையாகாது.


Next Story