சுகாதாரமான குடிநீர் கேட்டு அரசு கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் சிதம்பரம் அருகே பரபரப்பு


சுகாதாரமான குடிநீர் கேட்டு     அரசு கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்     சிதம்பரம் அருகே பரபரப்பு
x

சிதம்பரம் அருகே அரசு கல்லூரியில் சுகாதாரமான குடிநீர் கேட்டு மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

புவனகிரி,

உள்ளிருப்பு போராட்டம்

சிதம்பரம் அருகே சி. முட்லூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு சிதம்பரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி, கிள்ளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இருந்தும் சரிவர பராமரிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள் சரியான முறையில் சுகாதாரமான குடிநீர் மற்றும் பராமரிப்பின்றி கிடக்கும் கழிப்பறைக்கு தண்ணீர் வசதியும், கல்லூரி நேரத்துக்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தரக்கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பியபடி தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சுவார்தை

இதுபற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், கிள்ளை சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சுகாதாரமான குடிநீர் மற்றும் கழிப்பறைக்கு தண்ணீர் வசதி செய்து பராமரிக்க கல்லூரி நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். மேலும் கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனை ஏற்ற மாணவர்கள், போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story