மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமின் மனு இன்று விசாரணை


மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமின் மனு இன்று விசாரணை
x

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பாக பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.



கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் பெற்றோர், தங்கள் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி கொடுத்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக்கோரி அண்மையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அதன்படி பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்கும்படி சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து விழுப்புரம் கோர்ட்டில் இருந்து ரவிக்குமார் உள்பட 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து வந்து துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், பள்ளி மாணவி மரணம் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரும் ஜாமீன் கோரி விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் கடந்த 31-ந் தேதி மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி, விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி, பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் காசிவிஸ்வநாதன் மூலமாக மனுதாக்கல் செய்தார். இருதரப்பு வாதங்கள் மற்றும் மாணவி தாயார் தரப்பு வக்கீலின் வாதங்களை கேட்டறிந்த நீதிபதி (பொறுப்பு) சாந்தி, இம்மனு மீதான விசாரணையை வருகிற 10-ந் தேதிக்கு (புதன்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

அதன்படி, மாணவி ஸ்ரீமதி ரணம் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமின் மனு மீது விழுப்புரம் நீதிமன்றத்தில் நீதிபதி (பொறுப்பு) சாந்தி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.


Next Story