ஒருவார கால புத்தாக்க பயிற்சியால் மாணவ-மாணவிகள் உற்சாகம்
ஒருவார கால புத்தாக்க பயிற்சியால் மாணவ-மாணவிகள் உற்சாகம் அடைந்தனர்.
திருச்சி:
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கிட்டத்தட்ட 1½ ஆண்டாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. கொரோனா தொற்று தாக்கம் படிப்படியாக குறைந்ததால் கடந்த கல்வியாண்டு இறுதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து சில மாதங்களில் பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்தப்பட்டன.
பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு மே 5-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை தனித்தனியாக பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. இதையடுத்து 9-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கடந்த மே 13-ந் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. ஒரு மாத கோடை விடுமுறை முடிந்து எஸ்.எஸ்.எல்.சி. வரையிலான மாணவர்களுக்கு கடந்த 13-ந் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
புத்தாக்க பயிற்சி
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளி வந்த மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகளில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளிகளில் முதல் ஒருவாரத்துக்கு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்கப்படும் என்றும், இதில் நல்லொழுக்கம், உளவியல் ரீதியான வகுப்புகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
மேலும், புத்தாக்க பயிற்சி மாணவர்கள் ஏற்கனவே படித்தவற்றை மீண்டும் நினைவூட்டும் விதமாகவும், அவர்கள் பாடங்களை கற்றுக்கொள்ள தயார்ப்படுத்தும் வகையிலும் அமைய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்டந்தோறும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
நல்லொழுக்க கதைகள்
திருச்சி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த 4 நாட்களாக பாடங்கள் நடத்தப்படாமல் புத்தாக்க பயிற்சி மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியில் சொற்களஞ்சியம் உருவாக்குதல், எழுத்துக்களில் குறில், நெடில் வேறுபாடு, சொற்கட்டடம் அமைத்தல், நல்லொழுக்க கதைகள், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள், நடனம் போன்றவை மாணவ-மாணவிகளுக்கு கற்றுத்தரப்பட்டது.
இது குறித்து ஆசிரியை ஒருவர் கூறுகையில், புத்தாக்க பயிற்சி மாணவர்களை படிப்பதற்கு மனரீதியாக தயார்படுத்துவதற்கு பயன்பட்டு வருகிறது. கோடை விடுமுறை முடிந்து திரும்பியவுடனேயே பாடங்களை மாணவர்களிடம் திணிக்காமல் அவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வத்தை தூண்டுவதற்கும் புத்தாக்க பயிற்சி வழிகோலாக அமைகிறது. மேலும், புத்தாக்க பயிற்சி மட்டுமின்றி இனி தொடர்ச்சியாகவே மாணவ-மாணவிகளுக்கு நல்லொழுக்க வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி
அதாவது, பள்ளிகளில் நாளொன்றுக்கு 8 பாடவேளை வீதம் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்களுக்கு 40 பாடவேளை நடைபெறும். இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு 32 பாட வேளைகளில் பாடம் நடத்தப்படும். மீதமுள்ள 8 பாட வேளைகளில் மாணவர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக்காகவும், நீதிபோதனைகள் நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது என்றார்.
பாடங்களை கற்க ஆர்வம்
பள்ளியில் அளிக்கப்படும் புத்தாக்க பயிற்சி குறித்து மரக்கடை பகுதியில் உள்ள ஒரு அரசுப்பள்ளியை சேர்ந்த மாணவர் சகாய ஜெரால்டு கூறுகையில், பள்ளியில் ஒருவாரம் நடத்தப்படும் புத்தாக்கப்பயிற்சியில் புதிதாக பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டோம். சொற்களஞ்சியம் மூலம் புதிய, புதிய வார்த்தைகளை தெரிந்து கொண்டோம். மேலும் பழமொழிகளை வைத்து கதைகளை கூறினோம். நீதிக்கதைகளையும் ஆசிரியர்கள் கற்று தந்தார்கள் என்றார்.