உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள்


உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள்
x

கோடை விடுமுறைக்கு பின், மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை இனிப்பு கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை

கோடை விடுமுறைக்கு பின், மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை இனிப்பு கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.

பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறைக்கு பின், தமிழகத்தில் மழலையர் வகுப்பு குழந்தைகளுக்கும்(எல்.கே.ஜி., யு.கே.ஜி.), 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதேபோல மயிலாடுதுறை மாவட்டத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்டன.அதன்படி, மாவட்டத்தில் உள்ள 535 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 79 உயர்நிலைப்பள்ளிகள், 96 மேல்நிலைப்பள்ளிகள், பிரைமரி பள்ளிகள் 3 என மொத்தம் 843 பள்ளிகள் திறக்கப்பட்டன.

மாணவர்கள் உற்சாகம்

பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் தங்களது பள்ளி சீருடையில் உற்சாகமாக பள்ளிக்கு வந்திருந்தனர். பின்னர், காலை 9.30 மணி அளவில் இறைவணக்கம் பாடப்பட்டது. தொடர்ந்து 1 முதல் 10-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் வகுப்புகள் நடந்தன.மேலும் அனைத்து பள்ளிகளிலும் 1, 6 மற்றும் 9 ஆகிய வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கையும் நடந்தன. இதன்காரணமாக பள்ளிகளில் பெற்றோர்களும் குவிந்திருந்தனர். தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்புகளுக்கும் சேர்க்கை நடந்தது.

குத்தாலம்

இதேபோல, குத்தாலம் ஹைஸ்கூல் ரோட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் அருகிலுள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு அழைத்துச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தி வெற்றி திலகமிட்டு இனிப்பு வழங்கினர்.

ரெயில் பெட்டி வடிவில் வகுப்பறை

திருக்கடையூர் அருகே மாத்தூர் ஊராட்சியில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 185 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவர்களை கவரும் வகையில் 1-ம் மற்றும் 2, 3-ம்‌ வகுப்பு அறைகள் ரெயில் பெட்டிகள் போன்று வர்ணம் தீட்டி புதுப்பிக்கப்பட்டது. இந்த வகுப்பறைகளின் திறப்பு மற்றும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழுத்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் மங்கை முன்னிலை வகித்தார். இதில், பூம்புகார் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதுப்பிக்கப்பட்ட வகுப்பறையை திறந்து வைத்து மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார். இதில் ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள், தி.மு.க. ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், பொதுக்குழு உறுப்பினர் அமுர்த விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story