மாணவர்கள் சுயமாக சிந்தித்து கட்டுரை, கவிதை எழுத பயிற்சி அளிக்க வேண்டும் ஆசிரியர்களுக்கு இணை இயக்குனர் அறிவுறுத்தல்
மாணவர்கள் சுயமாக சிந்தித்து கட்டுரை, கவிதை, கதை எழுத ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும் என திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் தேர்வுகள் துறை இணை இயக்குனர் பொன்குமார் அறிவுறுத்தினார்.
மாணவர்கள் சுயமாக சிந்தித்து கட்டுரை, கவிதை, கதை எழுத ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும் என திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் தேர்வுகள் துறை இணை இயக்குனர் பொன்குமார் அறிவுறுத்தினார்.
திறன் மேம்பாட்டு பயிற்சி
நாமக்கல் மாவட்டத்தில் 83 குறுவள மையங்கள் உள்ளன. அவற்றின் மூலம் மாதம் தோறும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் மீளாய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த மாதத்துக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் மீளாய்வு கூட்டம் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்வி மாவட்டங்களில் நேற்று நடந்தது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி முகாமில் கடந்த மாதம் நடந்த கற்றல், கற்பித்தல் திறன், வருகிற செப்டம்பர் மாதம் எப்படி கற்றல், கற்பித்தல் திறனை மேம்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. தொடர்ந்து கல்வி உபகரணங்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இணை இயக்குனர் ஆய்வு
தேர்வுகள் துறை இணை இயக்குனர் பொன்குமார், நாமக்கல் நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நடந்த திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது, மாணவர்களுக்கு புரியும்படி நடத்த வேண்டும். அன்றாட நிகழ்வுகளை, வாழ்வியலோடு இணைத்து நடத்த வேண்டும். புதிய, புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தியும், உபகரணங்களை கொண்டும், மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். மாணவர்கள் சுயமாக சிந்தித்து, கதை, கவிதை, கட்டுரை எழுத பயிற்சி அளிக்க வேண்டும்.
அடிப்படை கணித செயல்பாடுகளை முழு கவனத்துடனும், விருப்பத்துடனும் கற்பிக்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு முன், அந்த பாடங்களை நன்றாக படித்திருக்க வேண்டும். அதற்காக அதிக நூல்களை படிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் புகழேந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் பெரியண்ணன், பள்ளி உதவி ஆய்வாளர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.