வேப்பாடி ஆற்றை ஆபத்தான முறையில் கடக்கும் மாணவர்கள்
வேப்பாடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் ஆற்றை கடந்து செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி:
வேப்பாடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் ஆற்றை கடந்து செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேப்பாடி ஆறு
தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் தர்மபுரி மெயின் ரோடு, ஆர்.எம். ரோடு, வினோபாஜி தெரு, விஜயநகரம் உள்ளிட்ட 15 வார்டுகள் உள்ளன. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில் உள்ள விஜயநகரம் சேலம் மாவட்ட எல்லையில் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக பொ.மல்லாபுரத்திற்கு தான் வந்து செல்ல வேண்டும்.
அங்குள்ள பள்ளி மாணவர்கள் பொ.மல்லாபுரம் அரசு தொடக்கப் பள்ளியிலும், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படித்து வருகின்றனர். மாவட்ட எல்லையில் வசிக்கும் பள்ளி மாணவர்களும் இந்த பகுதியில் படித்து வருகின்றனர். மழைக்காலங்களில் ஏற்காடு மலையில் இருந்து வரும் தண்ணீர் வேப்பாடி ஆற்றின் வழியாக தொப்பையாறு அணைக்கு செல்கிறது.
வெள்ளப்பெருக்கு
தற்போது தொடர் மழை காரணமாக வேப்பாடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஆற்றில் ஆபத்தான முறையில் நடந்து செல்கின்றனர். இதனால் மாணவ-மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இருமாவட்ட மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து பொ.மல்லாபுரம் பேரூராட்சி சார்பில் ஆற்றின் இருபுறமும் வெள்ள அபாய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இதை பேரூராட்சி தலைவர் சாந்தி, செயல் அலுவலர் நாகராஜன் ஆகியோர் பார்வையிட்டனர்.