கிருஷ்ணகிரி அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ் கிருஷ்ணகிரியில் மாவட்ட அரசு இசைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பாரம்பரிய கலைகளான குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பள்ளி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் சேரலாம். பயிற்சி காலம் 3 ஆண்டுகள் ஆகும். பயிற்சியின் முடிவில் தமிழ்நாடு தேர்வுத் துறையால் தேர்வு நடத்தப்பட்டு, அரசுத் தேர்வுகள் இயக்குனரால் இசைப்பள்ளி தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி கட்டணம் ஏதுமில்லை. சிறப்பு கட்டணமாக ஆண்டிற்கு ரூ.350 மட்டும் செலுத்த வேண்டும். மாணவர்களுக்கு நகர பஸ்சில் இலவச பயண சலுகை உண்டு. அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழகத்தின் பாரம்பரியமிக்க கலைகளை பயில்வதற்கு உரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் சேர்ந்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.