நான் முதல்வன் திட்டத்தில் மாணவர் சேர்க்கை
நான் முதல்வன் திட்டத்தின் மூலம்பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்குப் பல்வேறு இளநிலைப் பாடப்பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கை வழங்கப்பட்டு உள்ளது.
தளி,
தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் உடுமலை ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 'கல்லூரிக் கனவு, உயர்வுக்குப் படி' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் உடுமலை அரசு கலைக் கல்லூரி கலந்து கொண்டது. அப்போது பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்குப் பல்வேறு இளநிலைப் பாடப்பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கை வழங்கப்பட்டு உள்ளது.
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் கடந்த 7-ந் தேதியன்று மாணவர் சேர்க்கை இறுதிக்கட்டக் கலந்தாய்வு நடத்தப்பட்டது. மொத்தம் 889 இடங்கள் நிரப்பட்டன. மீதமுள்ள 25 காலியிடங்களுக்கு நடைபெற்ற நேரடி மாணவர் சேர்க்கையில் 17 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். நேரடியாகச் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கல்லூரி முதல்வர் முனைவர் சோ.கி. கல்யாணி கல்லூரியின் சிறப்புகளை எடுத்து உரைத்தார். இது போன்ற நேரடி மாணவர் சேர்க்கை ஏழை எளிய மாணவர்களும் உயர்கல்வி பயில சிறப்பான வாய்ப்பை வழங்கி உள்ளது என்றும், ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்ச்சி தொடர வேண்டும் என்றும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.