அரசு பஸ் நின்று செல்லாததை கண்டித்துமாணவர்கள் திடீர் சாலை மறியல்
விழுப்புரம் அருகே அரசு பஸ் நின்று செல்லாததை கண்டித்து மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அருகே கள்ளிப்பட்டு, வடுவம்பாளையம், குச்சிபாளையம், பஞ்சமாதேவி, வி.அகரம், வாணியம்பாளையம் உள்ளிட்ட பகுதியிலிருந்து கோலியனூர் பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் விழுப்புரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இவர்கள், பள்ளிக்கு பஸ்சில் சென்று வருவார்கள்.
இந்த நிலையில், காலை பள்ளி தொடங்கும் நேரங்களில், அதாவது காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை செல்லக்கூடிய அரக டவுன் பஸ்கள் கள்ளிப்பட்டு, வி.அகரம், வாணியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நிற்காமல் சென்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் உரிய நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சாலை மறியல்
நேற்று காலை வி.அகரம் பகுதியில் வழக்கம் போல் பஸ்சுக்காக மாணவ, மாணவிகள் காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் நிற்காமல் சென்றது. இதனால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தலைமையில் அந்தபகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்துநின்றன.
பேச்சுவார்த்தை
இதுபற்றி அறிந்த வளவனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபு, கலியமூர்த்தி மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதன்பின்னர், ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தலைமையில் விழுப்புரம் அரசு போக்குவரத்து கிளைமேலாளரிடம் மனு ஒன்றையும் கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.