அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்


அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்
x

வடமதுரை அருகே, தாமதமாக வருவதாக கூறி அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கொம்பேறிபட்டி, ஸ்ரீராமபுரம், வெங்கடாசலபுரம், செமனாம்பட்டி, காடையனூர், மம்மானியூர், ஊரானூர், புதுகொம்பேறிபட்டி, கருங்கல்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், வடமதுரையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். திண்டுக்கல்லில் இருந்து வடமதுரை வழியாக மம்மானியூருக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வந்தனர். ஆனால் அந்த பஸ் முறையாக இயக்கப்படுவதில்லை எனக்கூறி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்பிறகு தினமும் பஸ் இயக்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக அந்த பஸ் தாமதமாக வந்தது. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு தாமதமாக செல்ல நேரிட்டது. அப்போது ஆசிரியர்கள், தாமதமாக வந்ததாக கூறி மாணவ-மாணவிகளுக்கு விடுப்பு (ஆப்சென்ட்) போட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று தாமதமாக வந்ததாக கூறி கொம்பேறிபட்டி நால்ரோடு அருகே அரசு பஸ்சை பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பள்ளிக்கு செல்ல தாமதமின்றி பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதேபோல் வடமதுரை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் தாமதமாக செல்லும் மாணவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்துவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து பஸ்சை மாணவ-மாணவிகள் விடுவித்தனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story