கல்லூரிக்கு கட்டிடம் கட்டக்கோரி மாணவர்கள் காத்திருப்பு போராட்டம்
கல்லூரிக்கு கட்டிடம் கட்டக்கோரி மாணவர்கள் காத்திருப்பு போராட்டம்
குடவாசலில் கல்லூரிக்கு கட்டிடம் கட்டக்கோரி மாணவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கட்டிடத்தை செல்லூரில் அமைக்கக்கோரி தி.மு.க.வினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் ஒத்திவைப்பு
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க. ஆட்சியில் எம்.ஜி.ஆர்.அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கி நடந்து வருகிறது. இங்கு 650 மாணவ- மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
இந்த நிலையில் கல்லூரிக்கு நிரந்தர இடம் இல்லை எனவும், அரசு குடவாசலில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் எனவும் மாணவர்கள் கடந்த ஆண்டு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது மாவட்ட நிர்வாகம் தலையிட்டு 3 மாதத்தில் கல்லூரிக்கான கட்டிடம் கட்டப்படும் என கூறியதன் பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
மாணவ-மாணவிகள் காத்திருப்பு போராட்டம்
தற்போது மாவட்ட நிர்வாகம் குடவாசலில் கல்லூரி கட்டவில்லை எனவும், அருகில் 2 கிலோமீட்டர் தூரத்தில் செல்லூர் என்ற இடத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு கல்லூரி கட்டப்படும் எனவும் அறிவித்தது.
இதனை அறிந்த மாவட்ட மாணவர் சங்க செயலாளர் ஆனந்த் தலைமையிலும், கல்லூரி மாணவ நிர்வாகி முல்லை வேந்தன் முன்னிலையிலும் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் குடவாசல் பஸ் ஸ்டாண்டில் குடவாசலில் கல்லூரி கட்ட வேண்டும் என வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
தி.மு.க.வினர் போராட்டம்
இதேபோல் மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்த செல்லூரில் கல்லூரி கட்டிடம் கட்ட வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரபாகரன் தலைமையில் நகர தி.மு.க. செயலாளர் சேரன், பொதுக்குழு உறுப்பினர் முருகேசன் ஆகியோர் முன்னிலையில் குடவாசல் பஸ் ஸ்டாண்டில் காத்திருப்பு போராட்டம் செய்தனர்.
இதுகுறித்து குடவாசல் தாசில்தார் குருநாதன், நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்திய இருதரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் 15 நாட்களில் சரியான முடிவு எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இந்த போராட்டத்தால் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்்தனர்.