"மாணவர்கள் அரிவாளை தூக்கி திரிவது வேதனை அளிக்கிறது" - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
‘‘அறிவார்ந்த சமூகமாக வரவேண்டிய மாணவர்கள் அரிவாளை தூக்கி திரிவது வேதனை அளிக்கிறது’’ என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
நெல்லை அருகே தருவையில் நடைபெற்ற பனை தேசிய திருவிழாவில் பங்கேற்பதற்காக, தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி துணைநிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நெல்லை வந்தார். அவர், வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாம் அறிவாற்றல் மிகுந்த மாணவர்களை உருவாக்க நினைக்கிறோம். ஆனால், சில மாணவர்கள் அரிவாளை தூக்கிக்கொண்டு திரிகிறார்கள். புத்தகம் தூக்க வேண்டிய வயதில் கத்தியை தூக்குகிறார்கள். சாதிய வேற்றுமைகள் களையப்பட வேண்டும். அறிவார்ந்த சமூகமாக வர வேண்டிய மாணவர்கள் அரிவாளை தூக்கி திரிவது வேதனை அளிக்கிறது.
பிற மாநிலங்களைப் பற்றியும், பிற ஊர்களை பற்றியும் கவலைப்படும் தமிழக அரசு, நமது மாநிலத்தில் என்ன நடக்கிறது? என்பதை கண்டுகொள்ள வேண்டும். மற்ற மாநிலங்களைப் பார்ப்பதை விடுத்து, சொந்த மாநிலத்தை கவனிக்க வேண்டும். சாதிய ரீதியான செயல்பாடுகள் எங்கெல்லாம் உள்ளது என்பதை கண்காணித்து, அந்த விதைகளை முற்றிலுமாக அகற்ற அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செங்கோல் தமிழர்களின் பெருமை அடையாளம், அதனை மதம் சார்ந்து பார்ப்பதில்லை. தமிழகத்தில் 40 ஆயிரம் மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதவில்லை. ே்தர்வு எழுதியவர்களில் 50 ஆயிரம் மாணவர்கள் தமிழில் தேர்ச்சி அடையவில்லை. இதனை கண்டுகொள்ளாத தமிழக அரசு, இல்லாத இந்தி திணிப்பை பற்றி பேசுவதில் குறியாக உள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரும்போது அரசின் சாதனைகளை பிரதமர் பேசுவது இயல்புதான். மணிப்பூர் மாநிலம் குறித்து பிரதமர் பேசும்போது எதிர்க்கட்சிகள் அவையில் இல்லை. அதைப் பற்றி பேசுவதைக் கேட்கவும் அவர்கள் தயாராக இல்லை. தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு சண்டை போட செல்கிறார்களே தவிர, தமிழக உரிமைகளை மீட்டெடுக்க செல்லவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.