பஸ்கள் நின்று செல்லாததை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்
பஸ்கள் நின்று செல்லாததை கண்டித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வி.கைகாட்டி:
சாலை மறியல்
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பொய்யூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்கள், தினமும் வி.கைகாட்டியில் இருந்து அரசு பஸ்களில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை வி.கைகாட்டியில் பள்ளி செல்வதற்கு பஸ்சுக்காக காத்திருந்த மாணவ, மாணவிகள் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், பள்ளி செல்லும் நேரத்தில் பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நிற்காமல், தள்ளி நின்று பயணிகளை இறக்கிவிட்டு செல்வதால் மாணவர்கள் ஓடிச்சென்று பஸ்களில் ஏற முடியாமல், பஸ்சை தவற விடும் சூழல் உள்ளது. மேலும், சில பஸ்கள் நிற்காமல் செல்கின்றன. இதேபோல், மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பும்போதும், பொய்யூரில் பஸ்கள் நிற்காததால் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது, என்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
இது குறித்து தகவல் அறிந்த கயர்லாபாத் மற்றும் விக்கிரமங்கலம் போலீசார் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், சகாயஅன்பரசு ஆகியோர் அங்கு வந்து மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், அரியலூர் போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து கிளை மேலாளர் குணசேகரன் வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5 பேர் கைது
இதற்கிடையே மாணவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது, மீண்டும் சாலை மறியலுக்கு மாணவர்களுக்கு தூண்டுதலாக இருந்ததாக நாகமங்கலம் மாதா கோவில் பகுதியை சேர்ந்த குணசேகரன்(23), வி.கைகாட்டியைச் சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மகன் மணிகண்டன்(29), சந்திரபாளையம் கிராமத்தைச் சேர்ந்த அப்பாவுவின் மகன் பழனிசாமி(55), ஒரத்தூரைச் சேர்ந்த சண்முகம்(38) மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோர் மீது விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.