பள்ளிக்கூடத்துக்கு உற்சாகமாக வந்த மாணவ-மாணவிகள்


பள்ளிக்கூடத்துக்கு உற்சாகமாக வந்த மாணவ-மாணவிகள்
x

நெல்லை மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் நேற்று திறக்கப்பட்டன. உற்சாகமாக வந்த மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ரோஜாப்பூ, பேனா கொடுத்து வரவேற்றனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் நேற்று திறக்கப்பட்டன. உற்சாகமாக வந்த மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ரோஜாப்பூ, பேனா கொடுத்து வரவேற்றனர்.

பள்ளிக்கூடங்கள் திறப்பு

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் இறுதி தேர்வுகள் நடத்தப்பட்டு ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கோடை வெயில் தொடர்ந்து வாட்டி வதைத்து வந்ததால் பள்ளிகள் திறப்பு 7-ந்தேதிக்கு தள்ளிப்போனது. அதன் பிறகும் வெப்பம் தணியாததால் பள்ளிகள் திறப்பு தேதி 12-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அதன்படி 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் நேற்று திறக்கப்பட்டது.

மாணவர்கள் உற்சாகம்

நெல்லை மாவட்டத்தில் நேற்று அரசு, அரசு உதவி பெறும் தனியார் நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதையொட்டி மாணவ-மாணவிகள் நேற்று உற்சாகமாக பள்ளிகளுக்கு சென்றனர். 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு முடித்து அதே பள்ளி அல்லது புதிய பள்ளியில் 6, 9, பிளஸ்-1 வகுப்புகளில் சேர்ந்திருந்த மாணவர்கள் நேற்று புதிய வகுப்புகளில் அடியெடுத்து வைத்தார்கள். அவர்களை தலைமை ஆசிரியர், ஆசிரிய -ஆசிரியைகள் ரோஜாப்பூக்கள், சாக்லேட், பேனா போன்றவை கொடுத்து வரவேற்றனர். சக தோழர், தோழிகளை சந்தித்தபோது கைகொடுத்து மகிழ்ச்சியை தெரிவித்து வரவேற்றனர்.

பின்னர் தமிழக அரசு வழங்கிய இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. முதல் நாளில் இறைவணக்கம் செய்து படிப்பை தொடங்கினார்கள்.

பஸ்களில் கூட்டம்

கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று காலை நேரத்தில் மாணவ-மாணவிகள் பஸ்கள், ஆட்டோ, வேன்களில் பயணம் செய்து பள்ளிகளுக்கு சென்றனர். இதனால் நெல்லை மாநகர பகுதியில் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. விடுதியில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளுக்காக பெற்றோர் பெட்டி, பொருட்களை தூக்கிக்கொண்டு வந்தனர்.

முதல் நாள் வகுப்பு என்பதால் பல்வேறு பள்ளிகளில், வழக்கமான நேரத்துக்கு முன்னதாக பிற்பகலில் வகுப்புகளை முடித்து மாணவ-மாணவிகள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



Next Story