அரசு கல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்


அரசு கல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
x

அரசு கல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 19-ந் தேதி வரை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை மாணவர்கள் பதிவு செய்யலாம். மேலும் மாணவர்கள் கல்லூரியில் செயல்படும் உதவி மையத்திலும், இக்கல்லூரியில் பயிற்றுவிக்கப்படும் இளங்கலை சுற்றுச்சூழல் அறிவியல், தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், புள்ளியியல் ஆகிய 13 படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கல்லூரி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று முதல்வர் (பொறுப்பு) டோமினிக் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை வகுப்புகளுக்கு (பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம் (வணிகவியல்), பி.எஸ்சி. கணிதம் மற்றும் கணினி அறிவியல்) ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இணையவழி மூலமாக நடைபெறுகிறது. இதில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளங்களின் மூலமாக வருகிற 19-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். மாற்றுத்திறனாளி, விளையாட்டு பிரிவு மற்றும் முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள் மற்றும் தேசிய மாணவர் படை "ஏ" சான்றிதழ் பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட்டுப் பிரிவில் சிறப்பு ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பித்தவர்களின் தர வரிசை பட்டியல் தயார் செய்த பின் மாணவ-மாணவிகளின் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராணி தெரிவித்துள்ளார்.


Next Story