கிளாட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


கிளாட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 29 Sept 2023 12:15 AM IST (Updated: 29 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் தலைசிறந்த 22 சட்ட பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்காக நடைபெற உள்ள கிளாட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

சிவகங்கை

இந்தியாவின் தலைசிறந்த 22 சட்ட பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்காக நடைபெற உள்ள கிளாட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

மாணவர் சேர்க்கை

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:- இந்தியாவில் உள்ள தலைசிறந்த 22 சட்ட பல்கலைக்கழகங்களில் படிக்க 12-ம் வகுப்பு படிக்கும் மற்றும் முடித்த மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம். தேசிய கல்வி நிறுவனங்களில் சட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விளையாட்டு நுழைவு தேர்வு டிசம்பர் 3-ந்தேதி நடைபெற உள்ளது. 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எல்.எல்.பி. மற்றும் எல்.எல்.எம். படிப்புகளுக்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற பல்வேறு பல்கலைக்கழகங்களும் கிளாட் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மாணவர் சேர்க்கை நடத்துகின்றன.

இணையதளம் மூலம்

இதில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் http://consortiumofnlus.acin/ என்ற இணையதளத்தில் நவம்பர் 3-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினர் ரூ.4 ஆயிரம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.3500 செலுத்த வேண்டும். திருச்சியில் உள்ள சட்ட பல்கலைக்கழகத்தில் படிக்க தமிழக மாணவர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளது.

மாவட்டத்தில் கிளாட் நுழைவு தேர்வுக்கு 74 அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில் 16 பேர் பட்டியல் இன சமூகத்தை சேர்ந்தவர்கள், 58 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராவர்.

விழிப்புணர்வு கூட்டம்

இத்தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். இக்கல்வி ஆண்டுக்கான நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவர்கள் பெயர் பட்டியலை பெற்று தக்க வழிகாட்டுதல் வழங்கிட நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திட்டம் உள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம் அரசு பள்ளி மாணவர்களை தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பை உருவாக்குவது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கிளாட் நுழைவு தேர்வு தொடர்பாக விழிப்புணர்வு இணையவழி கூட்டம் சிவகங்கையில் உள்ள அரசு மாதிரி பள்ளியின் உயர் கல்வி வழிகாட்டி நிபுணர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் உதவி திட்ட அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெசிமா பேகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story