பொது நுழைவுத்தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


பொது நுழைவுத்தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
x

பொது நுழைவுத்தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி

பொது நுழைவுத்தேர்வு

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர 2022-23-ம் கல்வியாண்டு முதல் பொது நுழைவு தேர்வு (சி.யு.இ.டி) கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) மூலம் கணினி வழியில் நடத்தப்படும் இந்த தேர்வானது தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டங்களுக்கான மாணவர் சேர்க்கை 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் அல்லாமல், பொது நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு கடந்த ஆண்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

2023-ம் கல்வியாண்டில் 44 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட 90 பல்கலைக்கழகங்களில் 54,555 பாடப்பிரிவுகளில் சேர ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளது. அந்த வகையில் 2023-ம் ஆண்டு பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை நேற்று முன்தினம் முதல் தொடங்கியது.

12-ம் வகுப்பு

இந்த பொது நுழைவுத்தேர்வுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான https://cuet.samarth.ac.in-ல் சென்று விண்ணப்பிக்கலாம். அதில் கல்வி சான்றிதழ், வயது, சாதி சான்றிதழ், இருப்பிடம், சான்று ஆவணங்கள், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (10 கே.பி. முதல் 200 கே.பி. வரை), கையொப்பம், மின்னஞ்சல் முகவரி போன்ற இதர பொது விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் வருகிற மார்ச் 12-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை சமப்பிர்க்க வேண்டும்.

நடப்பு ஆண்டில் தேர்வு எழுத காத்திருக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு முன்பு அவர்கள் விண்ணப்பித்த விண்ணப்பத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிந்தவுடன் தங்களது சான்றிதழை பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக இந்த பொது நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. மே மாதம் 2-ம் வாரத்தில் தேர்வில் பங்கு பெற விண்ணப்பித்துள்ள ஒவ்வொரு மாணவருக்கும் தேர்வுக்கான அனுமதிச்சீட்டு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

ஆன்லைனில் மட்டுமே...

இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) தலைவர் ஜெகதேஷ் குமார் கூறுகையில், பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 2023-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் முடிக்கப்பட்டு புதிய கல்வி அமர்வு ஆகஸ்டு முதல் வாரத்தில் தொடங்கும். மாணவ, மாணவிகள் https://cuet.samarth.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் முறையில் மட்டுமே தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். 500 நகரங்களில் நடக்கும் சி.யு.இ.டி. முதற்கட்ட தேர்வை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்கு வெளியே வெளிநாட்டு நகரங்களிலும் இந்த தேர்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது, என்றார்.


Next Story