பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்
பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரப்பினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த நாடு முழுவதும் 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 மற்றும் 11-ம் வகுப்பு பயின்று வரும் 3,093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள், தேசியத் தேர்வு முகமையால் 29.9.2023 அன்று நடத்தப்பட இருந்த நுழைவுத்தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு மாணவர்கள் செய்யப்படுபவர் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது எழுத்து தேர்வானது காலப்பற்றாமை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசால் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கு அதிகமாக மதிப்பெண்பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மதிப்பெண் அடிப்படையில்
எனவே மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே இந்த ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிந்திட (National Scholarship Portal) https://scholarships.gov.in மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணைய தளத்தினை http://socialjustice.gov.in தொடர்ந்து நோக்கி கல்வி உதவித் தொகை பெறலாம்.
மேற்கண்ட தகவல் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டா் ஷ்ரவன்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.