பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
x

பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சங்கீதா கூறியுள்ளார்.

மதுரை

பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சங்கீதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரூ.1.25 லட்சம்

மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் (PM - YASASVI) தகுதியான மாணவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பித்து, எழுத்துத் தேர்வின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறலாம். 2023-2024-ம் நிதியாண்டில், நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த 3 ஆயிரத்து 93 மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குள் இருக்க வேண்டும். https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது பிளஸ்-1-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும். 9 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

எழுத்து தேர்வு

தேசியத்தேர்வு முகமை நடத்தும் YASASVI நுழைவுத்தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்விற்கு வருகிற 10-ந் தேதிக்குள் https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) 29-ந் தேதி நடைபெறும். விண்ணப்பத்துடன் செல்போன் எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த திட்டம் தொடர்பான முழுமையான விவரங்கள் https://yet.nta.ac.in மற்றும் http://socialjustice.gov.in/schemes/ ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இந்த திட்டம் மூலம் பயன்பெற விரும்பும் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தகுதி வாய்ந்த மாணவ-மாணவிகள் உரிய காலத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story