அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் மோதல்; 5 பேர் கைது
சோளிங்கரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் நேற்று மாணவர்கள் மோதிக்கொண்டனர். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாணவர்கள் மோதல்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் நேற்று முதலாம் ஆண்டு மாணவர்களிடையே வாய்த் தகராறு ஏற்பட்டு கல்லூரி வளாகத்தில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.
இது சம்பந்தமாக கல்லூரி முதல்வர் சுஜாதா சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை செய்து 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, 5 மாணவர்களை கைது செய்தனர்.
டி.ஐ.ஜி. விசாரணை
இது பற்றி தகவல் அறிந்ததும் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் எந்த தீய பழக்கத்திலும், குற்ற சம்பவத்திலும் ஈடுபடக்கூடாது, அப்படி ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்று எச்சரிக்கை செய்தனர். இன்ஸ்பெக்டர்கள் பாரதி, விநாயகமூர்த்தி, சாலமன்ராஜன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உடனிருந்தனர்.
இந்த சம்பவம் சோளிங்கரில் பரபரப்பை ஏற்படுத்தியது.