விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் 2 பேர் தற்கொலை தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் விபரீத முடிவு


விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் 2 மாணவர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

விழுப்புரம்


திருவெண்ணெய்நல்லூர்,


விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் நவீன்(வயது 15). மணகுப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்த நவீன் பொதுத்தேர்வு எழுதியிருந்தார். நேற்று காலை தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் நவீன் தேர்ச்சி பெற்று 500-க்கு 227 மதிப்பெண் எடுத்து இருந்தார்.

தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் நவீன் மனமுடைந்து காணப்பட்டார். மதியம் 12.30 மணியளவில் அவரது பெற்றோர் வெளியே சென்று இருந்தனர்.

தற்கொலை

வீட்டில் தனியாக இருந்த நவீன், கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த அவரது பெற்றோர், பிணமாக தொங்கிய மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது பற்றி தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மற்றொரு சம்பவம்

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள வி.புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 3 மகள்கள் இருந்தனர். இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷ் இறந்துவிட்டதால் 3 மகள்களையும் கீதா கட்டிட கூலி வேலை செய்து கஷ்டப்பட்டு வளர்த்து வந்தார். 3-வது மகள் ஆர்த்தி (வயது 15) புதுச்சேரி காட்டேரிக்குப்பத்தில் உள்ள இந்திராகாந்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், அவர் 500-க்கு 290 மதிப்பெண்கள் எடுத்து இருந்தார்.

எதிர்பார்த்ததை விட மதிப்பெண் குறைந்ததால் விரக்தியடைந்த ஆர்த்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கூலி வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய கீதா, மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இதுபற்றி தகவல் அறிந்த வானூர் போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை முயற்சி

மேலும் பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த செஞ்சி அருகே தேவனூர் கிராமத்தை சேர்ந்த சுதாகர் மகள் பரமேஸ்வரி (17), 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த வீராமூர் கிராமம் தண்டபாணி மகன் கேசவன் (15) ஆகியோர் தற்கொலைக்கு முயன்றனர்.

அதேபோன்று, 10-ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், அரகண்டநல்லூர் அருகே அருணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மகள் சுமதி (15), கண்டமங்கலம் அருகே பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் மகள் மாளவிகா (15) ஆகியோரும் தற்கொலைக்கு முயன்றனர். இவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில அனுமதிக்ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


Next Story