மாணவ, மாணவிகள் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வர வேண்டும்-கலெக்டர் அறிவுரை


மாணவ, மாணவிகள் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வர வேண்டும்-கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 16 Oct 2023 4:59 PM GMT (Updated: 16 Oct 2023 6:01 PM GMT)

ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கவனித்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாணவ, மாணவிகள் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வர வேண்டும் என கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

திருவண்ணாமலை

வாணாபுரம்

ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கவனித்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாணவ, மாணவிகள் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வர வேண்டும் என கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

சைக்கிள் வழங்கும் விழா

வாணாபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் கணேச மூர்த்தி தலைமை தாங்கினார். மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தண்டராம்பட்டு ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், திருவண்ணாமலை கோவில் முன்னாள் அறங்காவலர் கோவிந்தன், தாசில்தார் அப்துல்ரகூப், வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல், ஊராட்சி மன்ற தலைவர் மாதேஸ்வரன் ஆகிேயார் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மாணவ, மாணவிகள் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்குச் செல்ல வேண்டும். இதனால் அன்றாடம் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை தெரிந்து கொள்ள முடியும். பொதுவாக வீட்டில் விசேஷங்கள் நடைபெறும் போது அதற்காக காரணம் கூறி மாணவ, மாணவிகள் தேவையின்றி விடுப்பு எடுக்கின்றனர். இதனை மாணவ, மாணவிகள் தவிர்க்க வேண்டும்.

சில இடங்களில் ஆய்வு செய்யும்போது கணிதம், ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பாடங்களில் மாணவ, மாணவிகள் பின்தங்கி இருப்பதாக தெரிய வருகிறது. எனவே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு புரியும்படி பாடங்களை கற்றுத்தர வேண்டும்.

புதுமைப்பெண் திட்டம்

மேலும் உயர்கல்வி படிக்கும்போது மாணவிகள் எந்த ஒரு சூழலிலும் கல்வியை தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில் புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் அரசு வழங்கி வருகிறது. மாணவர்கள் முன்னேற்றத்துக்கு 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் ஆன்லைன் வழியாக பல்வேறு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதனை சரியான முறையில் மாணவ, மாணவிகள் பயன்படுத்தி சிறந்து விளங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் நந்தகுமார் நன்றி கூறினார்.


Next Story