படிப்பை கைவிட்டு மாயமாகும் மாணவிகள்


படிப்பை கைவிட்டு மாயமாகும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

விருதுநகர்

பெண் குழந்தைகளை போற்றி பாதுகாக்க வேண்டும் என்பதே தமிழர்களின் மரபாகும். கடந்த காலங்களில் பெண் குழந்தைகளை கல்வி கற்க அனுப்புவதற்கு தயக்கம் காட்டி வந்தனர். இதையடுத்து பெண் கல்வி பல்வேறு நிலைகளில் வலியுறுத்தப்பட்டதின் பேரில் பெண் குழந்தைகளை கல்வி கற்பதற்கு அனுப்பும் நிலை ஏற்பட்டது.

உயர்கல்வி

ஆனாலும் பள்ளிக்கல்வியோடு நிறுத்தி விட்டு உயர் கல்வி கற்பதற்கு அனுப்ப பெரும்பாலான குடும்பத்தில் தயக்கம் காட்டும் நிலை தொடர்ந்தது. ஆனால் அரசு தரப்பில் பெண்கள் உயர் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அதனை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட நிலையில் பெண்கள் உயர் கல்வி கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பல்வேறு நிலைகளில் மாணவர்களை விட மாணவிகளே உயர் கல்வியில் சாதனை படைக்கும் நிலை ஏற்பட்டது.

தற்போது தமிழக அரசு பெண்கள் உயர் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம் உதவித்தொகை வழங்கும் நிலை ஏற்பட்ட பிறகு கிராமப்புற மாணவிகளும் உயர் கல்வி கற்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்தநிலையில் கொரோனா பாதிப்பு காலத்தில் ஆன்லைன் கல்வி கற்றல் முறை அமலுக்கு வந்தபோது கிராமப்புறங்களிலும், நகரங்களிலும் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு செல்போன் வாங்கி கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

மாயமாகும் மாணவிகள்

செல்போன் பயன்பாடு வந்த பின்பு மாணவிகளிடையே கற்றல் பணி ஓரளவு பயன்தந்தாலும் தேவையற்ற தொடர்புகள் ஏற்பட்டு அவர்கள் மாயமாகும் நிலையும் அதிகரித்தது. இந்தநிலை தொடர்ந்து தற்போது மாவட்டத்தில் தினசரி மாணவிகளும், இளம்பெண்களும் அதிக எண்ணிக்கையில் மாயமாகும் நிலை நீடிக்கிறது.

அதிலும் குறிப்பாக பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவிகள், கல்லூரி மாணவிகள் மாயமாகும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. தினசரி போலீஸ் நிலையங்களில் 5 முதல் 10 பேர் மாயமான சம்பவங்கள் தொடர்பாக புகார் பதிவு செய்யப்படுகிறது. போலீசாரின் கவனத்திற்கு கொண்டு வராமலேயே மாயமான மாணவிகளின் எண்ணிக்கையும், இளம்பெண்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது.

விழிப்புணர்வு நடவடிக்கை

இந்த மாதிரியான நிகழ்வுகளை தவிர்க்க தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாணவிகளிடையே தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனாலும் கல்வி நிலையங்களிலும், கிராமப்புறங்களிலும், தொண்டு நிறுவனங்களும், சமூக அமைப்புகளும் போலீஸ் துறையின் சார்பிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்றால் மாணவிகள், இளம்பெண்கள் மாயமாகும் சம்பவங்கள் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மாற்றம் ஏற்படும்

மாயமாகும் சம்பவங்களை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

கல்வியாளர் விஜயகுமாரி:-

தற்போதைய சூழலில் மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடமை மூத்த தலைமுறையினருக்கு உள்ளது. அவர்களிடையே அவர்களது பிரச்சினை குறித்து விளக்கமாகவும், விரிவாகவும் பேசி அவர்களுக்கு தெளிவு ஏற்படுத்த வேண்டும். நான் மாணவிகளிடையே பேசும் போது நடப்பட்ட விதையை, செடியை உடனே பிடுங்கி எரிந்து விடலாம். ஆனால் நன்கு வளர்ந்த மரத்தை உடனே பிடுங்கி எரிய முடியாது என கூறுவேன். எந்த பிரச்சினையும் சிறிதாக இருக்கும் போது உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும். தற்போதைய மாணவிகளிடம் மூத்த தலைமுறையினர் தான் அவர்களிடம் நெருங்கி பழகி அவர்களுடைய பிரச்சினைகளை கேட்டு அறிந்து அதற்கு தெளிவு ஏற்படுத்த வேண்டும். அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். இதற்கு அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். அப்போது தான் மாற்றம் ஏற்படும்.

காதல் திருமணம்

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த வக்கீல் தங்கமணி:-

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக இளம் பெண்கள் மற்றும் மாணவிகள் மாயமாவது அதிகரித்து உள்ளது. பெண்களிடையே பள்ளிகளில் இருந்தே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். காதல் பிரச்சினையில் இன்றைய சமுதாயம் மிகவும் மோசமான நிலைக்கு செல்கிறது. இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

காதல் திருமணம் செய்து கருத்து வேறுபாடு ஏற்பட்ட சிலரின் விவாகரத்து வழக்குகள் அதிக அளவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. ஆதலால் பள்ளி பருவத்திலேயே மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விழிப்புணர்வு இல்லாததால் படிப்பை கைவிட்டு மாணவிகள் மாயமாகுவது டன், குழந்தை திருமணங் களும் அதிகரிக்கிறது.

கலந்தாய்வு

ராஜபாளையத்தை சேர்ந்த குடும்பத்தலைவி சங்கரேஸ்வரி கதிர்வேல்:-

குழந்தைகள் அதிக அளவில் காணாமல் போவதற்கு காரணம் சில பெற்றோர்களின் அறியாமை மற்றும் குடும்ப சூழ்நிலை ஆகும். மாதம் ஒருமுறை பள்ளிகளில் கலந்தாய்வு வைத்து பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கலாம். பிள்ளைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும். அவர்களுக்கு என்ன தேவை என்பதையும், மனநிலையையும் அறிந்து செயல்பட வேண்டும். குழந்தைகளிடம் அன்பு, அரவணைப்பு இருந்தால் பெற்றோரை விட்டு எந்த காலத்திலும் குழந்தைகள் செல்ல மாட்டார்கள்.

சிறப்பு வகுப்பு

ஏழாயிரம்பண்ணையை சேர்ந்த தலைமை ஆசிரியர் சிவநடராஜன்:-

விடுமுறை தினத்தில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தினால் பள்ளி முடியும் நேரத்தில் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வீட்டிற்கு வருகிறார்களா என பெற்றோர் கண்காணிக்க வேண்டும். வர தாமதம் ஆனால் உடனடியாக பள்ளிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆசிரியர்கள், தலைமை ஆசிரியரின் செல்நம்பரை பெற்றோர் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். பள்ளி நேரங்களில் மாணவ-மாணவிகளை பள்ளி விட்டு வெளியில் செல்ல உறவினர்கள், பெற்றோர் தவிர மற்றவர்கள் அழைத்தால் அனுமதிக்க கூடாது. மாணவிகள் மாயமாவதை தடுக்க பெற்றோர், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

விட்டுக்கொடுத்து வாழ்வோம்

சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் திலகராணி வரதராஜ்:- காதல் வயப்படும் பள்ளி, கல்லூரி மாணவிகள் பலர் வீட்டில் இருந்து வெளியேறி காதலர்களோடு செல்வதாக பல புகார்கள் வந்துள்ளது. இதில் திருமண வயதை எட்டாத சிறுமிகளுக்கு உரிய அறிவுரைகள் கூறப்படுகிறது. திருமணம் செய்ய தகுதியான பெண்களாக இருந்தால் அவர்களுக்கு உரிய கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு பெற்றோர் அல்லது காதலருடன் சேர்த்து வைக்கிறோம். குறிப்பாக குடிப்பழக்கம் உள்ள கணவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் தான் அதிகளவில் வீட்டில் இருந்து வெளியேறி செல்கிறார்கள். கணவன், மனைவி சண்டை இல்லாத குடும்பம் இல்லை. விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும். சிலர் முறை தவறிய காதலால் வீட்டில் இருந்து குழந்தைகளுடன் வெளியேறி வருகிறார்கள். பெண்கள் காணாமல் போவதை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. அவர்களின் குறைகளை கேட்டு தீர்த்து வைக்க மகளிர் போலீஸ் நிலையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முன்பை விட தற்போது பெண்கள் மாயமாகும் சம்பவங்கள் குறைந்துள்ளது. அதேநேரத்தில் பெண் மாயம் குறித்து போலீசில் புகார் செய்தால் அவர்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

குழந்தைகளை கண்காணிக்க வேண்டும்

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மனநல மருத்துவர் ராஜசேகரன்:-

பெண் குழந்தைகள் தொடக்கநிலை வகுப்புகளில் படிக்கும் போது பெற்றோரின் அரவணைப்பில் இருந்து வருவர். அவர்கள் மேல்நிலை வகுப்புகளுக்கு செல்லும் பொழுது அவர்களுக்கு தங்களது தனித்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற உணர்வு மேலோங்குகிறது. அந்தவகையில் அவர்கள் ெபற்றோரை விட்டு சற்று விலகி நிற்கின்றனர்.

மேலும் கடந்த காலங்களில் பெற்றோர், வீட்டில் உள்ள பெரியவர்கள் பெண் குழந்தைகளிடம் நெருக்கமான தொடர்பு வைத்துக்கொண்டு அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர். ஆனால் வெவ்வேறு நிலைகளில் வேலை பார்க்கும் சூழல் அதிகம் உள்ளதால் பெண் குழந்தைகளை கண்காணிக்கும் வாய்ப்பு குறைந்து விட்டது. மேலும் பெற்றோரிடையே பிரச்சினைகள் ஏற்படும் போது பெண் குழந்தைகள் தங்களைப் பற்றிய உணர்வுகள், உடல்நிலை மாற்றங்கள், உணர்வு மாற்றங்களை பற்றி அவர்களிடம் பகிர்ந்து கொள்ள தயக்கம் காட்டும் நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக அவர்களுக்கு செல்போன் சமூக வலைத்தளங்கள் மூலம் வெளி நபர்களின் தொடர்பு கிடைக்கும்போது அவர்கள் தங்கள் உணர்வுகளை பகிர தொடங்கி அதன் காரணமாக இம்மாதிரியான நிகழ்வுகள் ஏற்படுகிறது. அதில் பெரும்பாலும் மாணவிகள் தான் பாதிக்கப்படுகின்றனர். இந்தநிலையை தவிர்க்க பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளுடன் நெருக்கமான அணுகுமுறையை வைத்து கொள்ள வேண்டும் என்றார்.


தனி அலுவலர்கள் நியமனம்

விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள்:-

மாவட்டம் முழுவதும் பெண் போலீஸ் அதிகாரிகள் மூலம் கிராமப்புறங்களிலும், பள்ளி கல்லூரிகளிலும் மாணவிகளிடையே விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் போலீஸ் நிலையங்களில் மாயமாகும் மாணவிகள், இளம்பெண்கள் குறித்து வரும் புகார்கள் பற்றி விசாரித்து அவர்களை கண்டறிய தனியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு அவர்கள் மாயமான இளம் பெண்களையும், மாணவிகளையும் கண்டறியும் நிலையில் அவர்களது பணி பாராட்டப்படுகிறது.

மேலும் 18 வயது நிரம்பிய ஒரு பெண் தான் விரும்புபவரை திருமணம் செய்ய உரிமை உள்ள நிலையில் அதில் போலீசார் தலையிட வாய்ப்பில்லை. எனினும் மாயமாகும் இளம்பெண் மற்றும் மாணவியை கண்டறிந்து அவர்கள் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் பெற்றோரிடம் ஒப்படைக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பெற்றோரும் இந்த விஷயத்தில் தங்கள் பெண் குழந்தைகளிடம் நெருக்கமான அணுகுமுறையையும் உரிய கண்காணிப்பையும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றார்.


Related Tags :
Next Story