கல்வி சுற்றுலா செல்லும் மாணவ-மாணவிகள்
கோவையில் இருந்து பின்லாந்து, ஸ்வீடன் நாடுகளுக்கு மாணவ-மாணவிகள் 2 பேர் கல்வி சுற்றுலாவாக இன்று (புதன்கிழமை) புறப்பட்டு செல்கிறார்கள்.
கோவையில் இருந்து பின்லாந்து, ஸ்வீடன் நாடுகளுக்கு மாணவ-மாணவிகள் 2 பேர் கல்வி சுற்றுலாவாக இன்று (புதன்கிழமை) புறப்பட்டு செல்கிறார்கள்.
கல்வி சுற்றுலா
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மன்ற போட்டிகளான இலக்கிய மன்றம், சிறார் திரைப்படம், வினாடி-வினா, வானவில் மன்றம், கலைத்திருவிழா மற்றும் விளையாட்டு விழா போன்றவை கோவை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் 2022-23-ம் கல்வியாண்டில் பள்ளி அளவில் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்கள், மாநில அளவிலான போட்டியில் பங்கு பெற்றனர்.
அதன்படி கோவை மாவட்டத்தில் செங்குட்டைபாளையம் அரசு பள்ளி 7-ம் வகுப்பு மாணவர் சந்தோஷ் சிறார் திரைப்படம் போட்டியிலும், எல்லப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவர் கவின் வானவில் போட்டியிலும், காந்திமாநகர் அரசு உயர்நிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவி தேவதர்ஷினி இலக்கிய மன்றம் போட்டியிலும் மாநில அளவில் வென்றனா்.
இவர்களை போன்று சேரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் ஜேசன் கலை இலக்கிய திருவிழா போட்டியிலும், வடகோவை மாநகராட்சி பள்ளி 11-ம் வகுப்பு படிக்கும் அஜிதா என்ற திருநங்கை மாணவி தனிநபர் நாடகம் போட்டியிலும், காளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி ரிச்சி வர்ஷா விளையாட்டு பிரிவிலும், பொள்ளாச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் பாலகணேஷ் மற்றும் மாதம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி ஷஸ்மிதா ஆகியோர் வினாடி-வினா போட்டியிலும் வெற்றி பெற்றனர். இதன்மூலம் இவர்கள் 8 பேரும் வெளிநாடு கல்வி சுற்றுலா செல்ல தேர்வானார்கள்.
புறப்படுகிறார்கள்
இவர்கள் 6 கட்டங்களாக வெளிநாடு அழைத்து செல்லப்பட உள்ளனர். அதன்படி முதல்கட்டமாக மாணவர் பாலகணேஷ் மற்றும் மாணவி ஷஸ்மிதா ஆகிய 2 பேரும் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறார்கள்.
இவர்களுடன் நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு பள்ளி ஆசிரியை செந்தில்குமாரியும் செல்கிறார். அதன்படி இன்று (புதன்கிழமை) இரவு இவர்கள் கோவையில் இருந்து ரெயில் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்கள்.
தொடா்ந்து நாளை (வியாழக்கிழமை) காலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கி செல்கிறார்கள்.
அங்கு 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை பல்வேறு இடங்களை சுற்றிப்பார்க்கிறார்கள். அதன்பிறகு 16-ந் தேதி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் செல்கிறார்கள்.
பின்னர் அங்கு இருந்து 18-ந் தேதி சென்னை திரும்புகிறார்கள். இந்த தகவலை கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.