மாணவர்களை தனி வாகனங்களில் அழைத்து செல்ல பெற்றோர்கள் கோரிக்கை
விளையாட்டு போட்டிகளுக்காக அழைத்து செல்லும்போது மாணவர்களை தனி வாகனங்களில் அழைத்து செல்ல வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிங்கம்புணரி,
விளையாட்டு போட்டிகளுக்காக அழைத்து செல்லும்போது மாணவர்களை தனி வாகனங்களில் அழைத்து செல்ல வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
150 மாணவ, மாணவிகள்
சிங்கம்புணரியில் அரசு ஆண்கள் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நெற்குப்பை சாத்தப்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கோகோ போட்டிக்கு சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஒன்றியங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க சென்றனர். அதன்படி 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சிங்கம்புணரியில் இருந்து நெற்குப்பைக்கு அரசு பஸ்சில் சென்றனர்.
தனி வாகனங்களில்
ஆனால் காலை நேரத்தில் சிங்கம்புணரி வழியாக இயக்கப்படும் அரசு பஸ்சில் தினமும் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் நேற்று 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பஸ்சில் சென்றதால் வழகத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மாணவர்கள் ஆபத்தான நிலையில் படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்றனர். சில மாணவ, மாணவிகள் பஸ்சில் ஏற முடியாமல் பரிதவித்து நின்றனர். பின்னர் நீண்ட நேரம் காத்திருந்து வேறு பஸ்சில் விளையாட்டு போட்டிக்கு தாமதமாக சென்றனர்.
எனவே, இதுபோன்று விளையாட்டு போட்டிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளை தனியாக ஒரு வாகனங்களில் பத்திரமாக அழைத்து சென்று மீண்டும் கொண்டு வந்து விட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.