கலைக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்
கலைக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்று பேராசிரியர், பெற்றோர், மாணவ ர்கள் கருத்து தெரிவித்தனர்.
மாணவர்களும் பிளஸ்-2 படிப்பை முடித்து கொண்டு கல்லூரிகளில் கால் எடுத்து வைக்கையில் என்ன படிப்பு படிக்கலாம்? எந்தப் பிரிவில் சேர்ந்து படித்தால் எளிதில் வேலை கிடைக்கும்? என்பன போன்ற எந்த விவரமும் எல்லா மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அதிகம் தெரிவது இல்லை.
இதனால் பெற்றோர்கள் தங்கள் மகன் அல்லது மகள் விரும்பும் பாடப்பிரிவில் அல்லது தாங்கள் விரும்பிய பாடப்பிரிவில் சேர்த்து விடுகின்றனர்.
இந்தநிலையில் எந்தப் பாடப்பிரிவு எடுத்துப் படித்தால் பயன் உள்ளதாக இருக்கும் என்பது குறித்து இங்கு பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என பல தரப்பினர் கருத்துகள் தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
90 சதவீத இடங்கள் நிரம்பி விட்டன
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பி.எஸ்.விஜயலட்சுமி:- அரசு கல்லூரிகளை பொறுத்தவரை மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு கலந்தாய்வு நடைபெறுகிறது. அந்த வகையில் எங்கள் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கு 1,420 இடங்களுக்கு 23 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழக அளவில் அதிக விண்ணப்பங்கள் வந்த கல்லூரிகள் பட்டியலில் எங்கள் கல்லூரிக்கு 5-வது இடம் கிடைத்துள்ளது. கலை, அறிவியல் பிரிவுகளில் 90 சதவீதம் இடங்கள் நிரம்பி விட்டன. குறிப்பாக பொதுப்பிரிவு இடங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. இடஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமே உள்ளன. தற்போது மாணவர் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அரசு கல்லூரிகளில் கட்டணம் குறைவு என்பதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் பெரும்பாலும் அரசு கல்லூரிகளில் சேர விரும்புவது உண்டு. இதில் இடம் கிடைக்காத பட்சத்தில் தான் தனியார் கல்லூரிகளை நாடுவது வழக்கம். முன்பு இருபாலர் படிக்கும் கல்லூரிகளில் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு 70 சதவீதம், மாணவிகளுக்கு 30 சதவீதம் என்ற இடஒதுக்கீடு முறை இருந்தது. தற்போது இந்த இடஒதுக்கீடு முறை அகற்றப்பட்டுள்ளது. மாணவர்களை விட மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்ததுள்ளதால், முன்னுரிமை அடிப்படையில் மாணவிகளே அதிகமாக சேர்ந்துள்ளனர்.
உதவித்தொகை
இளங்காகுறிச்சி சேர்ந்த ஆசிரியர் உதுமான்அலி:- கலை மற்றும் அறிவியல் படிப்புகள் படித்தாலும் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அரசு வேலை வாய்ப்பை குறிக்கோளாக கொண்டுள்ளவர்களும், ஆசிரியர் பணியை குறிக்கோளாக கொண்டுள்ளவர்களுக்கும் கைகொடுப்பது கலை, அறிவியல் படிப்புகளே. இந்தியா அளவில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் சராசரி 26.5 சதவீதம் என்றும், 2030-க்குள் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்தும் நோக்கில் மத்தியஅரசு புதிய கல்விக்கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் தற்போதே உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை 51.4 சதவீதம் உள்ளது. தற்போது அரசுப்பள்ளியில் பயின்று கல்லுரிகளில் மேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந் தோறும் 1000 ரூபாய் திட்டத்தின் காரணமாக மாணவிகள் உயர்கல்வி படிக்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக அதிகம் செலவு செய்து படிப்பதை விட குறைந்த கட்டணத்தில் கலை அறிவியல் படிப்புகளை படிக்கவே ஏழை கிராமப்புற மாணவர்கள் விரும்புகிறார்கள். எனவே தமிழ்நாடு அரசு 100 சதவீதம் உயர்கல்வியை நோக்கி பயணிக்கும் அதே வேளையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு கலைக்கல்லூரியும், தொழில்நுட்ப கல்லூரியும் அமைத்திட வேண்டும் என்பதே கிராம் புற ஏழை எளிய மக்கள் உயர்கல்வியில் உயர்ந்த நிலையை அடைய வழிவகுக்கும்.
அரசு பணியாளர் தேர்வு
உப்பிலியபுரம் அருகே உள்ள பி.மேட்டூரை சேர்ந்த மாணவி திவ்யா சுப்ரமணியன்:- இந்தியாவில் பொறியாளர்களின் வேலை வாய்ப்பின்மை 58 சதவீதம் என்பது அதிர்ச்சியளிக்கிறது. மேலும் கணிணி பொறியாளர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதால் கலை அறிவியல் பட்டப்படிப்புகளில் சேர ஆயத்தமாகியுள்ளேன். 4 வருட பொறியியல் பட்டப்படிப்புகளை விட 3 வருட கலை அறிவியல் பட்டப்படிப்பில் தேர்வாகி அரசு பணியாளர் ஆணைய தேர்வுகளை எழுத திட்டமிட்டுள்ளேன். பட்டப் படிப்புகளுக்கான குறைந்த கல்லூரிக் கட்டணங்கள், நன்கொடையின்றி சேர்க்கை முதலானவை கலை அறிவியல் பட்டப் படிப்புகளில் சேர தூண்டுகிறது.
வேலைவாய்ப்புகள்
முசிறி அறிஞர் அண்ணா அரசு கல்லூரி பேராசிரியர்பரமசிவம்:- எந்த துறையை மாணவர்கள் தேர்தெடுத்தாலும் அதில் கணக்கு தணிக்கை கட்டாயமாக அமைந்துள்ளது. உதாரணமாக தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் வணிகவியல் துறையாக இருந்தாலும் சரி, வலைதள துறையாக இருந்தாலும் சரி அனைத்திற்கும் ஆடிட்டிங் என்ற தணிக்கை மிக முக்கியமாக இருப்பதால் பி.காம், எம்.காம். படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது. இதனால் மாணவர்கள் இதனை தேர்ந்தெடுக்கிறார்கள்.
தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், பி.எஸ்.சி. கணிதம் உள்ளிட்ட கலை பிரிவை முடித்து, அதன் மூலம் தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1) போன்ற அரசு போட்டித் தேர்வுகளை எழுதும் நோக்கில் சேருகின்றனர். ஒவ்வொரு பாடத்திற்கும் நிர்ணயிக்கப்பட்ட மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை விட, கூடுதலாக 2 அல்லது 3 மடங்கு விண்ணப்பங்கள் வருகின்றன. அரசு கல்லூரிகளில் சேர விண்ணபிக்கும் மாணவ, மாணவிகளுக்கென அந்தந்த கல்லூரியில் உதவி மையம் செயல்படுகிறது. இதன்மூலம் விண்ணப்பிக்கலாம்.
கலை அறிவியல் கல்லூரி படிப்புகளிலும் வேலைவாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் தற்போது உணர தொடங்கி உள்ளனர். அத்துடன் என்ஜினீயரிங், மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு செலவிடும் தொகையை போன்று கலை அறிவியல் கல்லூரிகளில் படிப்புகளுக்கு செலவிட வேண்டியதில்லை என்பதாலும் பெற்றோர்கள் கலை அறிவியல் கல்லூரி படிப்புகளில் தங்கள் மகன் அல்லது மகளை விரும்பி சேர்க்கின்றனர்.
துறையூரை சேர்ந்த கவிதா கோகுலகிருஷ்ணன்:-
சமீபகாலமாக மாணவ-மாணவிகள் அரசு கலைக் கல்லூரிகள் மற்றும் தனியார் கலை கல்லூரிகளில் பயில்வதற்கு ஆர்வலம் காட்டி வருகின்றனர். கலைக்கல்லூரிகளில் படிப்பதால் போட்டி தேர்வுகளை எளிதாக சந்திக்கலாம். ஒவ்வொரு துறையிலும் விருப்பத்திற்கு ஏற்றவாறு கல்வி கற்பதோடு அதில் தனித்துவமாக விளங்குகிறார்கள். கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தவிர மற்ற கல்லூரிகளில் பயின்றால் அந்தந்த பாட பிரிவிற்கு மட்டுமே சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்பிற்கு செல்ல முடியும். ஆனால் அது போன்ற பிரச்சினைகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிப்பதால் ஏற்படுவது இல்லை.
துறையூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஸ்ரீதர்மாணிக்கம்:- கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று, தற்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். முன்பெல்லாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள். தற்போது, மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. என்ஜினீயரிங் படிப்பை படித்த ஒருவர் அது சம்பந்தப்பட்ட துறையில் மட்டுமே பணியாற்ற முடியும். ஆனால் கலை அறிவியல் கல்லூரியில் படித்தவர்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்கலாம்.
குறைந்த செலவு
தா.பேட்டையை சேர்ந்த மாணவர் பி.நளினேஸ்வரன்:- நடந்து முடிந்த பிளஸ்- 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றேன். மாணவர்கள் பலரும் கலை, அறிவியல் பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம் போன்ற பாடப் பிரிவுகளை படிப்பதற்காக விருப்பமுடன் தேர்வு செய்து வருகின்றனர். கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. மற்றபடிப்புகள் படித்து விட்டு அதற்கேற்ப சரியான வேலை கிடைக்கவில்லை என்ற வருத்தமும் ஏற்பட்டுள்ளது. குறைந்த செலவில் கலை அறிவியல் படிப்பை முடித்து விட்டு அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் பங்கேற்று எளிதாக அரசு பணிகளில் சேர முடியும் என்பதாலும் கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்புகிறார்கள்.
2 மடங்கு மாணவர்கள்
கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, 'தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இடங்கள் உள்ளன. இந்தநிலையில், தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு கடந்த மாதம் 8-ந்தேதி வெளியான நிலையில், அன்றிலிருந்து மே 19-ந்தேதி வரை கலை அறிவியல் கல்லூரியில் ஆன்லைன் மூலம் சேர அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி 3 லட்சத்து 14 ஆயிரத்து 66 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு சேர்க்கை நடந்து வருகிறது. விண்ணப்பித்த மாணவர்கள், இணையதளம் மூலமாகவும் தங்களது தரவரிசையை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு 4 லட்சத்து 11 ஆயிரத்து 679 பேர் விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், கடந்த மாதம் 5-ந்தேதியில் இருந்து கடந்த 4-ந்தேதி வரை என்ஜினீயரிங் படிப்புகளில் சேர காலஅவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் விண்ணப்பித்த 1 லட்சத்து 87 ஆயிரம் பேருக்கும் ரேண்டம் எண் வெளியிடப்பட்டு உள்ளது. என்ஜினீயரிங் கல்லூரிகளை விட, கலை அறிவியல் கல்லூரிகளில் சுமார் 2 மடங்கு அதிகமான எண்ணிக்கையில் சேர மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்' என்றனர்.