ஒரு நிமிடத்தில் 2 லட்சம் விதைப்பந்து தயாரித்த மாணவிகள்
பாளையங்கோட்டை பள்ளியில் மாணவிகள் ஒரு நிமிடத்தில் 2 லட்சம் விதைப்பந்து தயாரித்து அசத்தினர்.
பாளையங்கோட்டை இக்னேசியஸ் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 5 ஆயிரம் மாணவிகள் சேர்ந்து மரக்கன்றுகள் உருவாக்குவதற்காக விதைப்பந்துகள் உருவாக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் வசந்தி மேரி பிரிண்டா தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் நிர்மலா முன்னிலை வகித்தார். ஒரு மாணவி ஒரு மரம், தலைக்கு 10 விதைப்பந்துகள் என்ற முழக்கத்துடன் ஒரு கோடி மரம் நடும் திட்டத்துடன் செயல்பட உள்ளது. சமூக ஆர்வலர் திருமாறன் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
5 ஆயிரம் பேர், 10 ஆயிரம் கைகள், தலா 10 விதைப்பந்துகள் என ஒரு நிமிடத்தில் 2 லட்சம் விதைகளை பந்துகளாக உருவாக்கும் உலக சாதனையை மாணவிகள் ஒரு நிமிடத்தில் செய்து காட்டினார்கள். இந்த விதைப்பந்தில் களிமண் மற்றும் வேம்பு, கொய்யா, பலா, நாவல், புளி உள்ளிட்ட மரவிதைகளை வைத்து தயார் செய்தனர். இந்த விதை பந்துகளை தாமிரபரணி நதிக்கரையில் இருபுறமும் மாணவிகள் வீசவும், மரக்கன்றுகள் நடவும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.