கண்டுபிடிப்பு பொருட்களை வியந்து பார்த்த மாணவர்கள்


கண்டுபிடிப்பு பொருட்களை வியந்து பார்த்த மாணவர்கள்
x
தினத்தந்தி 27 Sept 2023 12:15 AM IST (Updated: 27 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி சிக்ரியில் பார்வையாளர்கள் தினத்தையொட்டி நேற்று ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் நேரில் பார்வையிட்டு சென்றனர்.

சிவகங்கை

காரைக்குடி சிக்ரியில் பார்வையாளர்கள் தினத்தையொட்டி நேற்று ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் நேரில் பார்வையிட்டு சென்றனர்.

பார்வையாளர் தினம்

மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் சிக்ரி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுப்பாட்டின் கீழ் காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆய்வுக்கழகம் (சிக்ரி) உள்பட இந்தியா முழுவதும் 37 ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சிக்ரி நிறுவன நாளாக செப்டம்பர் மாதம் 26-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் இங்கு தயாரிக்கப்படும் மின்வேதியியல் பொருட்கள் உள்ளிட்ட தயாரிப்புகளை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நேரில் பார்வையிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

நேற்றைய தினம் பார்வையாளர்கள் தினமாக கடைபிடிக்கப்பட்டு காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அறிவியல் அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பு மக்களும் இங்கு வந்து நேரில் பார்வையிட அனுமதிக்கப்பட்டிருந்தது.

மாணவ, மாணவிகள்

இதையடுத்து சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினர் நேரடியாக வந்து இங்கு தயாரிக்கப்படும் உலோக அரிமான தடுப்பு, கரிய அமில மின்கலம், துத்தநாக புரோமின் மின்கலம், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், தூய நிலையான ஆற்றல், மின்வேதியியல் உணரிகள், நானோ மின்வேதியியல், எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு, கண்ணாடி குடுவைகள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்பு பொருட்களையும், அவற்றின் செயல் விளக்கத்தையும் நேரில் பார்வையிட்டனர்.

சிறப்பு பஸ்கள்

சில பொருட்கள் குறித்து மாணவ-மாணவிகள் விளக்கம் கேட்டு அதை நோட்டில் பதிவு செய்தனர். முன்னதாக சிக்ரிக்கு நேரில் பார்வையிட வந்த மாணவ, மாணவிகளுக்கு உணவு, குடிதண்ணீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை சிக்ரி நிர்வாகம் சார்பில் செய்துகொடுக்கப்பட்டிருந்தது.

மேலும் பார்வையாளர்களின் வசதிக்காக காரைக்குடி புதிய மற்றும் பழைய பஸ் நிலையத்தில் இருந்தும், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு அரசு பஸ்வசதியும் செய்துகொடுக்கப்பட்டிருந்தது.


Related Tags :
Next Story