கல்லூரி முதல்வரை கண்டித்து விளையாட்டு பயிற்சி கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்


கல்லூரி முதல்வரை கண்டித்து விளையாட்டு பயிற்சி கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

கல்லூரி முதல்வரை கண்டித்து விளையாட்டு பயிற்சி கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் நடந்தது.

சென்னை,

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத் தில் விளையாட்டு பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கல்லூரி மாணவி ஒருவருக்கு, கல்லூரி முதல்வர் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அந்த மாணவி போலீஸ் நிலையத்தில் புகாரும் கொடுத்திருந்ததாக சொல்லப்படுகிறது. புகாரைத் தொடர்ந்து, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கல்லூரியில் இதுதொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவ-மாணவிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர் நேற்று கல்லூரிக்கு பணிக்கு வந்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்தும், கல்லூரிகளில் அடிப்படை வசதி செய்துத் தரக் கோரியும், கொரோனா காலத்தில் வகுப்புகள் நடத்தப்படாததால் அதற்கான கல்வி கட்டணத்தை திரும்பி தருவதாக கூறி, அதனை தற்போது வரை தராததை கண்டித்தும், விளையாட்டு பயிற்சி கல்லூரி மாணவ-மாணவிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி நிர்வாகம் தரப்பில் மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனால் அங்கு நேற்று பரபரப்பு நிலவியது.


Next Story