கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
நெல்லை ராமையன்பட்டியில் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாட்டில் சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, நெல்லை உள்ளிட்ட 7 இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரி மறறும் ஆராய்ச்சி நிலையங்கள் அமைந்துள்ளன. இதில் 4½ ஆண்டு கால்நடை மருத்துவ படிப்பும், 6 மாதங்கள் பயிற்சியும் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. தற்போது இந்த பயிற்சி மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டு, 1 ஆண்டு பயிற்சி காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை ராமையன்பட்டி அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பயிற்சி காலத்தை 6 மாதங்கள் மட்டுமே செயல்படுத்த வேண்டும். பயிற்சி உதவி தொகையை பிற மாநிலங்களுக்கு இணையாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.23 ஆயிரம் வரை வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், தமிழக கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு நாமக்கல்லில் ரூ.10,500, நெல்லையில் ரூ.7,500 வழங்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. எனவே இந்த பயிற்சி கால உதவி தொகையை அதிகரித்து வழங்க வேண்டும்" என்றனர். இதையடுத்து மாணவர்களிடம் பேராசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.