மாணவிகள் தேர்ச்சி, நீட் தேர்வில் சாதனை: திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.25 லட்சம் சிறப்பு நிதி


மாணவிகள் தேர்ச்சி, நீட் தேர்வில் சாதனை: திருமங்கலம் அரசு பெண்கள்  மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.25 லட்சம் சிறப்பு நிதி
x

மாணவிகள் தேர்ச்சி, நீட் தேர்வில் சாதனை படைத்ததால் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.25 லட்சம் சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.

மதுரை


மாணவிகள் தேர்ச்சி, நீட் தேர்வில் சாதனை படைத்ததால் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.25 லட்சம் சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த தலைமை ஆசிரியர்

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில், 2020-21 கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. அதனைதொடர்ந்து, சிறந்த பள்ளிகளுக்கான பட்டியலில் மதுரை மாவட்டத்தில் 3 தொடக்கப்பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதேபோல, சிறந்த தலைமை ஆசிரியர்களுக்கான பட்டியலில் 70 தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டுள்ளது.

இதில், மதுரை மாநகராட்சி ஈ.வெ.ரா. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கருங்காலக்குடி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருமங்கலம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றின் தலைமை ஆசிரியர்கள், சிறந்த தலைமை ஆசிரியர்களுக்கான விருதை பெற்றுள்ளனர். இவர்களுக்கு பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு வசதி, மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவ ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, கல்வி சாராத பணிகள் என பல்வேறு படித்தரங்களின்படி விருது வழங்கப்பட்டுள்ளது.

ரூ.25 லட்சம் நிதி

இந்த நிலையில், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பள்ளி வளர்ச்சி பணிகளுக்காக ரூ.25 லட்சம் சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் 25 பள்ளிகளுக்கு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இந்த சிறப்பு நிதி கிடைத்துள்ளது.

இது குறித்து தலைமை ஆசிரியர் கர்ணன் கூறியதாவது:-

தமிழக அரசு கடந்த ஓராண்டில் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், மாணவிகளின் கல்விக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட முயற்சி, அடிப்படை கட்டமைப்பு வசதிகள், நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம், கலாசார பங்களிப்பு உள்ளிட்ட சில படித்தரங்களின் அடிப்படையில் சிறந்த தலைமை ஆசிரியர்களை தேர்ந்தெடுத்துள்ளது. இந்த ஆண்டு எங்கள் பள்ளியில் படித்த 3 மாணவிகள் நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். சேர்க்கை பெற்றுள்ளனர். அத்துடன், தமிழகம் முழுவதும் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை ஆசிரியர்கள் பணியாற்றும் 25 பள்ளிகளுக்கு மட்டும் சிறப்பு நிதியாக தலா ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியின் மூலம் வகுப்பறை, ஆய்வக வசதி, சுகாதாரவசதி, தண்ணீர் வசதி உள்ளிட்ட பள்ளிக்கு தேவையான வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படும். அரசின் விருது மற்றும் சிறப்பு நிதியானது, எங்களது பள்ளி ஆசிரியர்களிடையே உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளுக்கு இன்னும் சிறப்பான பயிற்சி வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்காக இன்னும் சிரத்தையுடன் பணியாற்ற எங்கள் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் உறுதியேற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story