சாலையை சீரமைக்க கோரி மாணவர்கள் மறியல்


சாலையை சீரமைக்க கோரி மாணவர்கள் மறியல்
x
தினத்தந்தி 11 March 2023 12:15 AM IST (Updated: 11 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி பள்ளி மாணவ -மாணவிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்

துடியலூர்

கோவை அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி பள்ளி மாணவ -மாணவிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழுதடைந்த சாலை

கோவையை அடுத்த துடியலூரில் இருந்து பன்னிமடை வழியாக வரப்பாளையம் செல்லும் சாலையில் அத்திக்கடவு குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றன. அந்த பணிகள் முடிவடைந்து நீண்ட நாட்கள் ஆகிறது. ஆனாலும் தோண்டப்பட்ட சாலையை சரி செய்யாமல் விட்டதால் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

மேலும் மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாகி விடுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல் லும் வாகன ஓட்டுனர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் அங்குள்ள தனியார் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் அவதிப்படுகின்றனர். அதோடு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

மாணவ- மாணவிகள் மறியல்

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், அவர்களின் பெற்றோர் ஆகியோர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட வில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ- மாணவிகள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் நேற்றுகாலை 8.30 மணி அளவில் திடீ ரென்று பன்னிமடையில் இருந்து வரப்பாளையம் செல்லும் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இது குறித்த தகவலின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், மண்டல அலுவலர் ஜோதி, பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு நமச்சிவாயம், தடாகம் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக நாயனார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர் கள், சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, உடனடியாக சாலை அமைக்க உரிய அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்த னர். அதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மறியல் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள மாணவ -மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது.


Next Story