தமிழ்நாடு தினத்தையொட்டி மாணவர்கள் பேரணி

தமிழ்நாடு தினத்தையொட்டி மாணவர்கள் பேரணி நடைபெற்றது.
கோவை
சென்னை மாகாணத்திற்கு பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயரிட்டு அறிவித்த நாளான ஜூலை 18-ஐ தமிழ்நாடு தினம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி ஜூலை 18-ந் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சோதனையிலும் சாதனை, மகளிர் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம், இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வு ஏற்றம் பெற, உள்ளிட்ட தலைப்புகள் மற்றும் தமிழக முதல்-அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள், அறிவித்த திட்டங்களின் புகைப்படங்கள், சென்னை மாகாண வரைபடம், தமிழ்நாட்டின் தற்போதைய வரைபடம் உள்ளிட்ட புகைப்படங்கள் கொண்டு புகைப்படக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியை நேற்று கலெக்டர் கிராந்திகுமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த புகைப்பட கண்காட்சி வருகிற 23-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து பள்ளி கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு நாள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை கலெக்டர் கிராந்தி குமார் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம், கே.ஜி மருத்துவமனை, பந்தயசாலை வழியாக சி.எஸ்.ஐ பள்ளியை சென்றடைந்தது. இந்த நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், வருவாய் அலுவலர் ஷர்மிளா, நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, தமிழ்வளர்ச்சித் துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.






