பள்ளிக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த அமைச்சரிடம் மாணவர்கள் கோரிக்கை
பள்ளிக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த அமைச்சரிடம் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்திற்கு சாலை விரிவாக்க பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் சிவசங்கர் பங்கேற்றார். மேலும் இந்த நிகழ்ச்சியையொட்டி அப்பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. சாலை பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அந்த பந்தலில் பொதுமக்களை சந்தித்து அவர்களது வரவேற்பை அமைச்சர் சிவசங்கர் ஏற்றுக்கொண்டார். அப்போது தங்கள் பள்ளிக்கு அருகில் அமைச்சர் வந்திருப்பதை அறிந்த மாணவர்கள், தங்களது ஆசிரியர்கள் உதவியுடன் அமைச்சரை சந்தித்தனர். அப்போது அமைச்சர், அவர்களது கல்வி நிலை குறித்து விசாரித்தார். தாங்கள் அனைவரும் நன்றாக படிப்பதாகவும், தங்கள் பள்ளியில் சரியான தண்ணீர் வசதி இல்லாத நிலை இருப்பதாகவும், எனவே தங்கள் பள்ளிக்கு தரமான குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்றும், அத்துடன் மாணவிகள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளுக்கு தடையில்லாமல் தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக அருகில் இருந்த அதிகாரிகளிடம், மாணவர்களின் குடிநீர் மற்றும் கழிவறைக்கான தண்ணீர் வசதியை ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, மாவட்ட கலெக்டர் மூலம் தனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார். அப்போது அருகில் இருந்த மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா உடனடியாக தண்ணீர் பிரச்சினையை தீர்த்து தருவதாக மாணவர்களிடம் உறுதி அளித்தார். இதையடுத்து அமைச்சர் சிவசங்கர் மாணவர்களிடம் விடை பெற்று, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.