"வேலையை உருவாக்குபவர்களாக மாணவர்கள் இருக்க வேண்டும்" கவர்னர் இல.கணேசன் பேச்சு


வேலையை உருவாக்குபவர்களாக மாணவர்கள் இருக்க வேண்டும் கவர்னர் இல.கணேசன் பேச்சு
x

‘மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலையை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும்’ என நாகாலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் தெரிவித்தார்.

சென்னை,

டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழா சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். ஆஸ்பத்திரியில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், நாகாலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மேலும், ரஷிய நாட்டின் குர்ஸ்க் மாநிலத்தின் மருத்துவ பல்கலைக்கழகம் ஏ.சி.சண்முகத்திற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

விழாவில், பல்கலைக்கழகத்தின் தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார், செயலாளர் ஏ.ரவிக்குமார், ரஷியன் பெடரேஷன் கான்சலேட் ஜெனரல் ஓலேக் என்.அவ்தேவ், வேந்தர் ஆர்.எம்.வாசகம், துணைவேந்தர் கீதாலட்சுமி, முதன்மை கல்வியாளர் கோபாலகிருஷ்ணன், இணை-துணை வேந்தர்கள் பத்மநாபன், ரவிச்சந்திரன், ஜெயசந்திரன், பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில், கவர்னர் இல.கணேசன் பேசியதாவது:-

வேலையை உருவாக்குபவர்கள்

இந்த உலகம் மாணவர்களாகிய உங்களுக்கானது. புதிய தொழில்நுட்பங்கள் மூலம் புதிய, புதிய வேலைவாய்ப்புகள் நாள்தோறும் உருவாகி வருகிறது. எனவே, தொழில்நுட்ப ரீதியான அறிவு உங்களின் வாழ்வை செழுமைப்படுத்த மிகவும் உதவிகரமாக இருக்கும். நமது நாடு கல்வியிலும், சுகாதாரத்திலும் சிறந்து விளங்கி வருகிறது.

மேலும், மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலையை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும். நான் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி 2 ஆண்டுகளுக்கு பின்னர் உங்கள் மத்தியில் தமிழில் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. எனக்கு முன்ஜென்மம் குறித்து நம்பிக்கை உள்ளது. அந்தவகையில், இங்கிருக்கும் சிலர் முன்ஜென்மத்தில் பகத்சிங், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதி, ராணி லட்சுமிபாய் என யாராக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். இவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை படித்துள்ளேன். அவர்கள் அனைவரும் இறக்கும் தருவாயில் கூட பாரத தாயின் மடியில் மீண்டும், மீண்டும் பிறப்பேன் என்றார்கள்.

உறுதுணையாக இருப்போம்

நாம் இப்போது சுதந்திர நாட்டில் இருக்கிறோம். இப்போது நாம் சிறை செல்லவோ, தடி அடியை தாங்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடி சமீபத்திய சுதந்திரதின விழாவில், 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது இந்தியா வளர்ந்த நாடு என்ற பெயரை பெறவேண்டும் என்று பேசியுள்ளார். பிரதமர் மோடி மாணவர்களை நம்பிதான் இந்த சபதத்தை எடுத்துள்ளார். இதற்கு அனைவரும் உறுதுணையாக இருப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story