சமுதாயத்தில் சிறந்த வல்லுனர்களாகவும், முதன்மை அலுவலர்களாகவும் வர வேண்டும்


சமுதாயத்தில் சிறந்த வல்லுனர்களாகவும், முதன்மை அலுவலர்களாகவும் வர வேண்டும்
x
தினத்தந்தி 25 Feb 2023 11:02 AM GMT (Updated: 25 Feb 2023 5:07 PM GMT)

மாணவர்கள் கல்வியை நல்ல முறையில் பயின்று சமுதாயத்தில் ஒரு சிறந்த வல்லுநர்களாகவும், பல்வேறு அரசுப்பணிகளில் முதன்மை அலுவர்களாகவும் வரவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் முருகேஷ் கூறினார்.

திருவண்ணாமலை

மாணவர்கள் கல்வியை நல்ல முறையில் பயின்று சமுதாயத்தில் ஒரு சிறந்த வல்லுனர்களாகவும், பல்வேறு அரசுப்பணிகளில் முதன்மை அலுவலர்களாகவும் வரவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் முருகேஷ் கூறினார்.

நான் முதல்வன் திட்டம்

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி களப்பயண உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம் கிராமங்கள் நிறைந்த பகுதி. ஏழை, எளிய குழந்தைகள் அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றார்கள். இந்த ஆண்டு 10-ம் வகுப்பில் 2 ஆயிரத்து 500 மாணவர்களும், 12-ம் வகுப்பில் 4 ஆயிரத்து 99 மாணவர்களும் கல்வியை தொடர முடியாமல் இடைநிற்றலில் உள்ளனர். மாணவர்கள் கல்வியை நல்ல முறையில் பயின்று சமுதாயத்தில் ஒரு சிறந்த வல்லுனர்களாகவும், பல்வேறு அரசுப்பணிகளில் முதன்மை அலுவலர்களாகவும் வரவேண்டும். கல்வி தான் நம்முடைய மூலதனம். எனவே அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் உயர்கல்விக்கு செல்ல வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம்.

புதுமைப் பெண் திட்டம்

தமிழ்நாடு முதல்- அமைச்சர், பள்ளிக் கல்வித் துறைக்கு எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதா, மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்த திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். அந்த திட்டத்தில் ஒன்று தான் நான் முதல்வன் என்ற திட்டமும். அவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் 280 மாணவர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் திருவண்ணாமலை கலைஞர் கலைக்கல்லூரியில் 210 மாணவர்களும், தென்னாங்கூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மாணவ, மாணவிகள் கல்லூரியில் எந்த பாடப்பிரிவினை தேர்வு செய்யலாம், எவ்வாறு கல்வி பயிலாம், எந்த துறையை தேர்வு செய்யலாம் என்பது குறித்த விளக்கவுரை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மருத்துவக் கல்லூரி முதல்வர் அரவிந்த், மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story