மாணவர்கள் திறனை வளர்த்து கொள்வதற்காக புத்தகங்கள் வாசிக்க பழகி கொள்ள வேண்டும்
மாணவர்கள் திறனை வளர்த்து கொள்வதற்காக புத்தகங்கள் வாசிக்க பழகி கொள்ள வேண்டும் என திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.
மாணவர்கள் திறனை வளர்த்து கொள்வதற்காக புத்தகங்கள் வாசிக்க பழகி கொள்ள வேண்டும் என திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.
வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி
திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட வேலை வாய்ப்பு தொழில்நெறி மையம் இணைந்து விடுதி மாணவர்-மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியை நேற்று நடத்தியது. நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள் தங்கள் எதிர்கால கல்வி மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்
மாணவ-மாணவிகளாகிய நீங்கள் அனைவரும் செல்போனை ஒதுக்கி வைத்து விட்டு, அதில் நேரத்தினை செலவிடாமல் உங்கள் திறனை வளர்த்து கொள்வதற்காக புத்தகங்கள் வாசிக்க பழகி கொள்ள வேண்டும். செல்போன் மிகவும் உறுதுணையாக இருந்து, உங்கள் தேடலே எளிதாக வழங்க கூடியது. அதனை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளவேண்டும். படிப்பில்லாமல் முன்னேறலாம் என்பதனை தவிர்த்து இக்கால சூழ்நிலையில் நீங்கள் முன்னேறுவதற்கு ஆயுதமாக விளங்குவது கல்வி மட்டுமே.
எதிர்கால திறன் வளர்ச்சிக்கு
துறை வாரியாக கல்வி பயின்று வருவதை செய்முறையாக செய்து பயில வேண்டும். இதுவே உங்களுக்கு பிற்காலத்தில் வேலை வாய்ப்பு திறனை உருவாக்கி தரும். இத்திறனை ஊக்குவிப்பதற்காகவே நான் முதல்வன் திட்டம் மூலம் பல திறன் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் திறனை அதிகரிக்க செய்வதே.
இது மட்டுமின்றி அரசின் மூலம் தங்களுக்கு வேலை வாய்ப்பு வழிகாட்டி நூல்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வழிகாட்டி நூலானது உங்களது எதிர்கால திறன் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பாலசந்தர், முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மைய அலுவலர் பழனிவேல், திரு.வி.க. அரசினர் கலைக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராஜாராமன், மத்திய பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நாகராஜன், தமிழ் பேராசிரியர் அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.