போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்கள் வாசிப்பு திறனை அதிகரிக்க வேண்டும்: கரூர் முதன்மை மாவட்ட நீதிபதி பேச்சு


போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்கள் வாசிப்பு திறனை அதிகரிக்க வேண்டும்: கரூர் முதன்மை மாவட்ட நீதிபதி பேச்சு
x

போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்கள் வாசிப்பு திறனை அதிகரிக்க வேண்டும் கரூர் முதன்மை மாவட்ட நீதிபதி கூறினார்.

கரூர்

சட்ட விழிப்புணர்வு

கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நேற்று மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் 55-வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கான நூலக விழிப்புணர்வு மற்றும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு முதன்மை கல்வி அலுவலர் கீதா தலைமை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார் வரவேற்றார். மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். கரூர், தலைமை குற்றவியல் நீதிபதி ராஜலிங்கம், கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பாக்கியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் கரூர் முதன்மை மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு நூலக உறுப்பினர் அட்டை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- நீதிபதிகள் ஆகிய நாங்கள், நேற்றைய தினம் மாணவர்களாக இருந்தோம். இன்றைய தினம் நீதிபதிகளாக இருக்கிறோம். நீங்கள் இன்றைய தினம் மாணவர்களாக இருக்கிறீர்கள். நாளைய தினம் நீதிபதிகளாக வருவதற்கு தயாராக இருக்க வேண்டும். மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். நல்ல எதிர்காலம் உள்ளது.

உரிமை சட்டம்

மாணவர்களிடம் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவது 100 சதவீதம் வெற்றி கிடைக்கும். தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்ட பெற்றோர்கள், உறவினர்களிடம் மாணவர்கள் அறிவுறுத்த வேண்டும். ஏனெனில் தற்போது சாலை விபத்துகளில் உயிர் சேதம் அதிகமாக ஏற்படுகிறது. அதற்கு தலைகவசம் அணியாதது மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. லைசன்ஸ் இல்லாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்ட கூடாது. சமுதாயம் எதை சரி என்கிறதோ அது உரிமை சட்டமாக மாறுகிறது. சமுதாயம் எதை தவறு என்கிறதோ அது தண்டனை சட்டமாகிறது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு இருக்கிறது. இந்த வாய்ப்பினை நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

150 நூல்கள் வழங்கல்

மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கம் ஏற்பட்டால்தான், பிற்காலத்தில் போட்டி தேர்வு உள்ளிட்ட எந்த இடத்திற்கு சென்றாலும் தன்னம்பிக்கை வரும். இதனால் மாணவர்கள் வாசிப்பு திறனை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முடிவில் வாசகர் வட்ட தலைவர் சங்கர் நன்றி கூறினார். கரூர் மாவட்ட நீதிமன்ற நூலகத்தின் பயன்பாட்டிற்கு மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் ரூ.23 ஆயிரம் மதிப்பில் 150 நூல்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் வாசகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story