அரசின் திட்டங்களை மாணவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்
அரசின் திட்டங்களை மாணவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று கண்காட்சியை தொடங்கிவைத்து சப்-கலெக்டர் பேசினார்.
பொள்ளாச்சி
அரசின் திட்டங்களை மாணவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று கண்காட்சியை தொடங்கிவைத்து சப்-கலெக்டர் பேசினார்.
புகைப்பட கண்காட்சி
மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் அரசின் திட்டங்கள், சர்வதேச யோகா தினம், சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டு மற்றும் சுற்றுச்சூழல் வாழ்க்கை முறை குறித்த 3 நாட்கள் புகைப்பட கண்காட்சி நேற்று பொள்ளாச்சி பல்லடம் ரோட்டில் உள்ள ரோட்டரி அரங்கில் தொடங்கியது. கண்காட்சியை சப்-கலெக்டர் பிரியங்கா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து அவர் குத்துவிளக்கேற்றி வைத்தார். பின்னர் குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை பார்வையிட்டார். அதை தொடர்ந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்வியல் இயக்க கையேட்டை சப்-கலெக்டர் வெளியீட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மாணவ-மாணவிகளுக்கு பரிசு
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கு சிறு தானிய சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு சிறு தானியங்கள் ஆண்டாக கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் மாணவ-மாணவிகள் வருங்கால இந்தியா. எனவே அரசின் அனைத்து திட்டங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கு தினமும் செய்தித்தாள் படிக்க வேண்டும். பெற்றோருக்கும், அக்கம், பக்கத்தினருக்கும் மாணவர்கள் தான் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் கள விளம்பர அலுவலர் பிபின் எஸ்.நாத் வரவேற்று பேசினார். விழாவில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் கோவை இந்திய தர நிர்ணய ஆணையத்தின் முதுநிலை இயக்குனர் கோபிநாத், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜ்குமார், ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி, கள விளம்பர உதவி அலுவலர் தியாகராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலக தொழில்நுட்ப உதவியாளர் சந்திரசேரன் நன்றி கூறினார். கண்காட்சி நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறுகிறது.