மாணவ-மாணவிகள் போதை பழக்கத்துக்கு ஆளாகக்கூடாது

மாணவ-மாணவிகள் போதை பழக்கத்துக்கு ஆளாகக்கூடாது என்று வால்பாறை அரசு பள்ளியில் நடந்த கலந்துரையாடலின்போது மாவட்ட முதன்மை நீதிபதி அறிவுரை வழங்கினார்.
வால்பாறை
மாணவ-மாணவிகள் போதை பழக்கத்துக்கு ஆளாகக்கூடாது என்று வால்பாறை அரசு பள்ளியில் நடந்த கலந்துரையாடலின்போது மாவட்ட முதன்மை நீதிபதி அறிவுரை வழங்கினார்.
நீதிமன்றத்தில் ஆய்வு
வால்பாறை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கோவை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நீதிமன்றத்தின் செயல்பாடுகள், விசாரணையில் உள்ள வழக்குகள், தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகள் குறித்து கேட்டறிந்தார். முன்னதாக மாவட்ட முதன்மை நீதிபதியை நீதிமன்ற பணியாளர்கள், வக்கீல்கள், வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வலர்கள் வரவேற்றனர். ஆய்விற்கு பிறகு மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர், வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு குறித்து மாணவ-மாணவிகளிடையே கலந்துரையாடினார். அப்போது நீதிபதி ராஜசேகர் கூறியதாவது:-
துணிச்சலுடன் வாழ வேண்டும்
மாணவ-மாணவிகள் பொது இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். பள்ளி பருவத்தில் சமுதாய அக்கறையுடனும், சேவை மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும். குற்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது. எந்தவித போதைப்பொருள் பழக்கத்திற்கும் ஆளாகக்கூடாது. மாணவிகள் தைரியத்துடனும், எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும். தாழ்வுமனப்பான்மையை கைவிடவேண்டும். எதையும் சாதிக்கும் திறமை கொண்டவர்களாக இருக்க வேண்டும். உங்கள் கையில் நாளைய சமுதாயம் உள்ளது என்பதை உணர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக அவரை தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமையில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் வரவேற்றனர். அப்போது வால்பாறை நீதித்துறை நடுவர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி சுவேதரணயன் உடனிருந்தார்.






