மாணவர்கள் நேரத்தை வீணடிக்க கூடாது
மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல் நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும் என்று கோவை அரசு சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.வி.விஸ்வநாதன் பேசினார்.
மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல் நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும் என்று கோவை அரசு சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.வி.விஸ்வநாதன் பேசினார்.
பட்டமளிப்பு விழா
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் மற்றும் கோவை அரசு சட்ட கல்லூரி ஆகியவை சார்பில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கோவை சட்ட கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணை வேந்தர் சந்தோஷ் குமார், தமிழ்நாடு சட்ட கல்வி இயக்குனர் விஜயலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர்.
கோவை அரசு சட்ட கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். விழாவில் மாணவ- மாணவிகளுக்கு சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பட்டம் வழங்கினார். விழாவில், கோவை அரசு சட்ட கல்லூரி முன்னாள் மாணவரும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியுமான கே.வி.விஸ்வநாதன் பேசியதாவது:-
நன்றி கூற வேண்டும்
மாணவர் பருவத்தை கொண்டாட வேண்டும். இங்கு படிக்க வாய்ப்பு அளித்த பெற்றோர்களுக்கு மாணவர்கள் நன்றி கூற வேண்டும். கோவையில் 1979 -ம் ஆண்டு கோவை சட்ட கல்லூரி நிறுவப்பட்டது. இந்த கல்லூரி இல்லை என்றால் என் வாழ்க்கை எப்படி இருந்து இருக்கும் என்று தெரியவில்லை. நான் இந்ந நிலைக்கு உயர கோவை சட்ட கல்லூரி தான் காரணம்.
மாணவர்கள், ஆசிரியருக்கு நன்றி கூற வேண்டும். பட்டம் பெற்ற மாணவர்களுக்கு இப்போது தான் வாழ்க்கை தொடங்குகிறது. நாம் எப்படி வாழ வேண்டும் என்று சொல்லி கொடுக்க பள்ளிகள் இல்லை. நான் உங்கள் முன்பு நீதிபதியாக நிற்க வில்லை. நண்பனாக நிற்கிறேன்
நேரத்தை வீணடிக்காதீர்
மாணவர்கள் முதலில் பணிவாக இருக்க வேண்டும். அதனால் பல லாபம் உண்டு. அனுபவம் உள்ளவர்கள் சொல்வதை கூர்ந்து கேட்டு அறிய வேண்டும். நீங்கள் தலை சிறந்த வழக்கறிஞராக வாழ்த்துகிறேன். நீங்கள் பல வழக்குகளை சந்திக்க உள்ளீர்கள். அப்போது கட்சிக்காரர் சொல்வதை கூர்ந்து கேட்க வேண்டும்.
நீதிபதிகளும் சிறப்பு கேட்பு திறன் உள்ளவர்களாக இருப்பது நல்லது. நேரம் மிக முக்கியம். நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பது நம் கையில் தான் உள்ளது. நேரத்தை வீணாக்காதீர்கள். நேரம் கிடைக்கும் போது நல்ல புத்தகங்களை படியுங்கள். அது உங்களுக்கு பயன்படும்.
நூலகங்கள்
நீதிமன்ற நூலகங்களை நன்றாக பயன்படுத்துங்கள். வழக்கறிஞர் தொழில் மிக கடினமான தொழில். அதில் ஊறி விட்டால் அமிர்தம் போன்றது. உடலை நன்றாக கவனித்து கொள்ளுங்கள். நீதிபதியிடம் உங்கள் வாதங்களை பணிவாக எடுத்து வையுங்கள். எதிர்கால திட்டங்களை வகுத்துக் கொள்ளுங்கள்.
இளைய வழக்கறிஞர்கள் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று நினைத்து கொள்ளாதீர்கள். அது பல துன்பங்களை ஏற்படுத்தி விடும். இந்த துறையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்து இருக்கிறது. உங்கள் மனதில் சரியானதை தைரியமாக பேசுங்கள். பொய் வழக்கு என்று தெரிந்தால் வாதாட வேண்டாம். வழக்கறிஞர் தொழிலுக்கு வானம் கூட எல்லை ஆகாது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதிக மதிப்பெண்
விழாவில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியதாவது:-
வழக்கறிஞர் பெருமன்றத்தில் இருந்து நேரடியாக சுப்ரீம் கோர்ட்டு நீதியரசர் ஆவது மிகமிக அரிது. சட்டம், அரசு, நீதித் துறை மற்றும் பத்திரிகை துறை ஆகியவை சேர்ந்து செயல்பட்டால் நாடு சிறப்பாக இருக்கும். அதிக மதிப்பெண் பெற்ற மாண வருக்கு மிக எளிதாக கிடைக்ககூடியது சட்டப்படிப்பு.
15 அரசு சட்ட கல்லூரிகளில் உள்ள கட்டிடங்கள் தனியார் கல்லூரிகளில் இல்லை. தனியார் பள்ளியில் சென்று படித்தால் ரூ.3 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டும். கோவை சட்டக் கல்லூரியில் யானை பிரச்சினை இருப்பதாக கூறினர். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விழாவில் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோவை அரசு சட்டக்கல்லூரியில் பட்டம் பெற 1,034 மாணவர்கள் பதிவு செய்து இருந்தனர். ஆனால் 700 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.