மாணவர்கள் சிறப்பாக விளையாடி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்
மாணவர்கள் சிறப்பாக விளையாடி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.
காரைக்குடி
மாணவர்கள் சிறப்பாக விளையாடி மாவட்டத் திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.
முதல்-அமைச்சர் கோப்பை
மாவட்ட அளவிலான முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா காரைக்குடி அருகே மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மாங்குடி, தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டுத்துறையில் பல்வேறு சாதனைகளை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் கடந்த 60 ஆண்டுகளில் விளையாட்டுத்துறையில் செய்ய வேண்டிய பணிகளை கடந்த 6 மாதங்களில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு மேம்படுத்தி வருகிறார்.
ஊக்கப்படுத்த
தமிழக அரசு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடையே விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளை ஊக்கப்படுத்த பல்வேறு போட்டிகளை நடத்துகிறது. இந்த வாய்ப்புகளை மாணவ-மாணவிகள் சிறந்த முறையில் பயன்படுத்தி கல்வி மற்றும் விளையாட்டில் சிறப்பு மிக்கவர்களாக திகழ வேண்டும்.
இதன் மூலம் உலகளவில் நடைபெறும் போட்டிகளிலும் பங்கு பெறுவதற்கு வாய்ப்பை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் கடந்த பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கப்பட்டது. இந்த போட்டியானது பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 5 பிரிவாக நடத்தப்பட்டது. இந்த போட்டியில் ஆண்கள் 4ஆயிரம் பேரும், பெண்கள 3ஆயிரத்து 500 பேரும் கலந்துகொண்டனர்.
இந்த போட்டிகளில் முதல் 3 இடங்களை பெற்று வெற்றி பெற்ற 950 வீரர்கள் மற்றும் 688 வீராங்களைகள் என மொத்தம் 1638 விளையாட்டு வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ், ஊக்கத்தொகையாக முதல் பரிசாக ரூ.3ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.2ஆயிரமும், 3-வது பரிசாக ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் முதல் இடம் பெற்றவர்கள், மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க வாய்ப்பை பெறுவார்கள்.
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
அதில் முதல் இடத்தை பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று விளையாட உள்ளனர். மேலும் மாவட்டத்தில் இருந்து மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ளும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சீருடைகள், போக்குவரத்து பயணபடி, தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவ வசதி ஆகிய வசதிகள் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநில போட்டியில் தனிநபர் பிரிவில் வெற்றி பெறும் வீரர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2-வது பரிசாக ரூ.75 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. இதுதவிர குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.37ஆயிரத்து 500-ம், 3-வது பரிசாக ரூ.25ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. எனவே மாணவர்கள் சிறந்த முறையில் விளையாடி பரிசுகளை பெற்று சிவகங்கை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கல்லல் யூனியன் தலைவர் சொர்ணம் அசோகன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரமேஷ்கண்ணன், பள்ளி தலைவர் குமரேசன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரஸ்வதி, ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் நாராயணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சரி லெட்சுமணன், தளக்காவூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.