மாணவ-மாணவிகள் நேர்முக சிந்தனையோடு படிக்க வேண்டும்
மாணவ-மாணவிகள் நேர்முக சிந்தனையோடு படிக்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேசினார்.
வாணியம்பாடி பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி நிர்வாக அறங்காவலர் கே.டி.அன்பழகன் தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர்கள் ஏ.கேசவன், சரோஜா ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் கே.விஜயராஜ் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் கலந்துகொண்டு, முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகங்களை வழங்கி பேசினார். அப்போது மாணவ, மாணவிகள் கவன சிதறல் இல்லாமலும், நேர்முக சிந்தனையோடும் படித்து முன்னேற வேண்டும். வாழ்க்கையின் அனைத்து அனுபவங்களையும் கல்லூரியில் படிக்கும்போதே தெரிந்து கொண்டு எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். நானும் பி.டெக் துறையில் படித்து, பின்னர் ஐ.பி.எஸ். தேர்வு எழுதி இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். மாணவர்கள் சிறந்த முறையில் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார். முடிவில் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியை கே.ரேகா நன்றி கூறினார்.