பஸ் வசதி கேட்டு மாணவர்கள் மறியல்
பழனி அருகே பஸ் வசதி கேட்டு பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பஸ் வசதி
பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியில் இருந்து சின்னக்காந்திபுரம் வழியாக புளியம்பட்டிக்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் புளியம்பட்டி, சண்முகம்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் விவசாயிகளும் விளைபொருட்களை நெய்க்காரப்பட்டிக்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
எனவே நெய்க்காரப்பட்டி-புளியம்பட்டி இடையே பஸ் வசதி செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் பலதடவை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சாலை மறியல்
இந்தநிலையில் நேற்று காலை புளியம்பட்டி, சண்முகம்பாறை பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் நெய்க்காரப்பட்டி பஸ்நிறுத்தம் பகுதிக்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் தங்கள் பகுதிக்கு பஸ் வசதி கேட்டு, பழனி-கொழுமம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இவர்களுடன் பா.ஜ.க. நிர்வாகிகளும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பழனி தாசில்தார் சசிக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தென்னரசு (தாலுகா), உதயக்குமார் (டவுன்) சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, தங்களது பகுதிக்கு உடனடியாக பஸ் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசாரும், வருவாய்த்துறையினரும் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொள்ளாத பொதுமக்கள், தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதற்கிடையே போக்குவரத்து கழக மண்டல மேலாளர் மணிவண்ணன் (இயக்கம்) தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. அதையடுத்து போக்குவரத்து, வருவாய்த்துறை மற்றும் போலீசார் நெய்க்காரப்பட்டி-புளியம்பட்டி வழித்தடத்தில் ஆய்வு செய்தனர்.
பின்னர் பஸ் போக்குவரத்து தொடங்குவது குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் 5 மணி நேரம் நடந்த போராட்டத்தால் பழனி-கொழுமம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பஸ்சின் மேற்கூரையில் ஏறிய பொதுமக்கள்
நெய்க்காரப்பட்டியில், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டபோது, பாப்பம்பட்டியில் இருந்து பழனி நோக்கி வந்த பஸ்சை சிறைபிடித்தனர். பின்னர் அதன் மேற்கூரை மற்றும் பஸ்சில் சிலர் ஏறி அமர்ந்தனர். தொடர்ந்து அவர்கள் நெய்க்காரப்பட்டி, புளியம்பட்டி பெயர் எழுதப்பட்ட நோட்டீசை பஸ்சின் முன் கண்ணாடியில் ஒட்டி போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.