மத்திய கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் :கலெக்டர் தகவல்


மத்திய கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் :கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 5 Oct 2023 6:45 PM GMT (Updated: 5 Oct 2023 6:46 PM GMT)

மத்திய கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் புதிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கல்வி உதவித்தொகை

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இந்த மாணவ-மாணவிகள் ஒவ்வெருவருக்கும் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

விண்ணப்பிக்கலாம்

இந்த கல்வி உதவித்தொகைக்கு 2023-2024-ம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த தகுதியான மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட நல இயக்ககம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கடைசிநாள்

புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை-5.போன்- 004-29515942, tngovtiitscholarship@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பூர்த்தி செய்த புதுப்பித்தல் விண்ணப்பங்களை வருகிற டிசம்பர் 15-ந் தேதிக்குள்ளும் மற்றும் புதிய விண்ணப்பங்களை அடுத்த ஆண்டு(ஜனவரி) 15-ந் தேதிக்குள்ளும் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story
  • chat