டவுன் பஸ் வராததால் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்


டவுன் பஸ் வராததால் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்
x

ஆதனூர் கிராமத்துக்கு டவுன் பஸ் வராததால் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்கின்றனர். எனவே, அரசு பஸ் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆதனூர் கிராமத்துக்கு டவுன் பஸ் வராததால் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்கின்றனர். எனவே, அரசு பஸ் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவ-மாணவிகள்

ஆரணியை அடுத்த ஆதனூர், கிழையூர், விருபாச்சிபுரம், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு தினமும் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் நகர்ப்புறத்துக்கு அரசு டவுன் பஸ்களில் பயணித்து படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆதனூருக்கு பொதுமக்களின் நீண்டநாள் கோரிகையை ஏற்று வழிதடம் எண் 14 என்ற அரசு பஸ்சை இயக்கி வந்தனர். அந்த அரசு பஸ் மூலமாக பொதுமக்கள், தின கூலி தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் நகர்ப்புறங்களுக்கு சென்று பயனடைந்து வந்தனர்.

இந்த டவுன் பஸ் ஆற்காட்டில் இருந்து ஆதனூர் கிராமம் வழியாக ஆரணிக்கு சென்று வந்தது.

திடீர் நிறுத்தம்

இந்த நிலையில் ஆதனூர் கிராமத்துக்கு வந்து செல்லும் இந்த டவுன் பஸ் திடீரென முன்னறிவிப்பு இன்றி நிறுத்தப்பட்டது. மேலும் அந்த டவுன் பஸ் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் கூட்ரோடு அருேக பொதுமக்களை ஏற்றி, இறக்கி செல்கிறது.

இதுகுறித்து கிராம மக்கள் அதிகாரிகளை சந்தித்து மீண்டும் டவுன் பஸ் விடவேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள், சாலை சரியில்லை. அதிகமாக குண்டும் குழியுமாக உள்ளதால் பஸ்கள் வராது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆபத்தான பயணம்

இதனால் ஆதனூர் மற்றும் கிழையூர், விருபாச்சிபுரம், காந்திநகர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் உள்ள ஆற்காடு - ஆரணி செல்லும் கூட்ரோட்டுக்கு செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர்.

மேலும் தினமும் காலை பள்ளி நேரங்களில் மாணவர்கள் நகர்ப்புற பள்ளிகளுக்கு செல்ல அந்த வழியாக செல்லும் மினிவேன் உள்ளிட்ட வாகனங்களில் உதவிகளை கேட்டு ஆபத்தான முறையில் தொங்கி கொண்டு செல்கின்றனர்.

எனவே, வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அரசு பஸ்சுக்காக நீண்ட தூரம் நடந்து செல்லும் அவல நிலையை போக்கவும், ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தவிர்க்கவும் மாவட்ட நிர்வாகம், போக்குவரத்துக் கழகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story