ஹீரோவாக நினைத்து கொண்டு பஸ்களில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள்


ஹீரோவாக நினைத்து கொண்டு பஸ்களில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள்
x

ஹீரோவாக நினைத்து கொண்டு பஸ்களில் தொங்கியபடி சாகச பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திருவண்ணாமலை



ஹீரோவாக நினைத்து கொண்டு பஸ்களில் தொங்கியபடி சாகச பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஹீரோவாக நினைத்து சாகச பயணம்

கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு தற்போது பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது. காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவர்கள் சிலர் பஸ்களில் படியில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

சமீப காலமாக மாணவர்கள் இது ஒரு வகை கலாசாரமாக நினைத்து கொண்டு பஸ்களில் பிறரை அதிர்ச்சி அடையும் வகையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பஸ்களில் படியில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள் தங்களை ஹீரோவாக நினைத்து கொண்டு இதுபோன்ற சாகச பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்கள் சிலர் பஸ்சில் பயணம் செய்யும் போது படிக்கட்டில் தொங்கியபடி ஒற்றை காலை தரையில் உரசியபடியும், பஸ்சின் பக்கவாட்டில் உள்ள கம்பியில் தொங்கிக்கொண்டும், ஜன்னலில் அமர்ந்து கொண்டும், பஸ்சின் மேற்கூரையின் மேல் அமர்ந்து கொண்டும் சாகச பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களுக்கு உயிரின் மதிப்பு தெரியாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். கடந்த சில நாட்களாக இதுகுறித்த வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

எச்சரித்தாலும் கேட்பதில்லை

பஸ்களில் படியில் தொங்கும் மாணவர்களை கண்டக்டரும், டிரைவரும் எத்தனை முறை சொன்னாலும் கேட்பதே இல்லை என்று வேதனையாக தெரிவிக்கின்றனர். மேலும் சில நேரங்களில் பஸ்சில் இடம் இருந்தால் கூட கண்டக்டர்கள் உள்ளே வருமாறு அழைத்தாலும், சில மாணவர்கள் கேட்காமல் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்கின்றனர்.

பஸ்களில் சாகச பயணம் மேற்கொள்ளும் மாணவர்களை போலீசார், பொதுமக்கள், பஸ் டிரைவர், கண்டக்டர்கள் எச்சரித்தாலும் அவர்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.

சமீபத்தில் திருவண்ணாமலையில் இருந்து செங்கம் வழியாக பெங்களூரு செல்லும் அரசு பஸ்சில் பள்ளி மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டிலும் மற்றும் பக்கவாட்டிலும் தொங்கியபடி பயணம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.

அதேபோல் நேற்றுமுன்தினம் செங்கம் சாலையில் சென்ற அரசு பஸ்சில் மாணவர்கள் உயிரை துட்சமாக நினைத்து படியில் தொங்கியபடி செல்லும் புகைப்படமும் சமூக வலைதளத்தில் பரவியது. இதுகுறித்து மாணவர்கள் தரப்பில் கேட்கும் போது, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வரும் சமயங்களில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும் என்கின்றனர்.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்கள் பஸ்களில் தொங்குவதால் உயிர் சேதம் போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் படிகளில் தொங்கி பயணம் செய்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து அறிவுரை வழங்க வேண்டும்.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரி வேளை நாட்களில் காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் பள்ளி, கல்லூரி நிர்வாகமும், பெற்றோரும் பஸ்களில் படியில் தொங்கியபடி பயணம் செய்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.

காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் வாகன சோதனை செய்து பஸ்களில் படியில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்களுக்கு உரிய முறையில் அறிவுரை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.




Related Tags :
Next Story