மாணவர்கள் சாலை மறியல் செய்ய முயற்சி


மாணவர்கள் சாலை மறியல் செய்ய முயற்சி
x

சின்னசேலம் அருகே மாணவர்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் கல்வி நிறுவனத்தில் கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லூரி கடந்த ஓராண்டாக இயங்கி வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய அளவுக்கு பேராசிரியர்கள் நியமிக்க வேண்டும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் புதிய கட்டிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் கனியாமூர் நான்குமுனை சந்திப்பில் சாலைமறியல் செய்ய முயன்றனர். இது பற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி விரைந்து சென்று மாணவர்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்தார். கல்லூரி வளாகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதற்கு கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். இதில் தாசில்தார் விஜயபிரபாகரன், இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது மாணவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். இதையொட்டி சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் கனியாமூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story