துபாய் பயணத்தை முடித்து திருச்சி வந்த மாணவ-மாணவிகள்
துபாய் பயணத்தை முடித்து திருச்சி வந்த மாணவ-மாணவிகளுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் வரவேற்பு அளித்தனர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இணையவழியில் நடைபெற்ற வினாடி-வினா போட்டியில் மாவட்டம் வாரியாக தேர்வு செய்யப்பட்ட 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் 67 பேர் துபாய்க்கு கல்விச்சுற்றுலா மற்றும் சார்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தக திருவிழாவுக்கு புறப்பட்டு சென்றனர். கடந்த 10-ந் தேதி காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திருச்சியில் இருந்து விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்ட இந்த மாணவ-மாணவிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர். பின்னர் 4 நாட்கள் பயணத்தை முடித்து கொண்டு அங்கிருந்து நேற்று அதிகாலை 2 மணி அளவில் விமானம் மூலம் திருச்சி திரும்பினர். திருச்சி விமானநிலையத்தில் அவர்களை பெற்றோர்களும், ஆசிரியர்களும் வரவேற்று அழைத்து சென்றனர். இந்த நிகழ்ச்சியில் கல்வித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.